கோவை: “மின் கட்டண உயர்வு குறித்து குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தெரிவித்த கருத்து பரிசீலிக்கப்படும்; நோட்டாவுடன் போட்டி போடும் பாஜகவை திமுகவுடன் ஒப்பிடக் கூடாது” என மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு விழா நடக்கும் ஈச்சனாரியில் இன்று மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”மின்சாரத் துறையில் ஏற்பட்ட இழப்புகள், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளால் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர், மின் கட்டண உயர்வில் பிக்ஸ்டு சார்ஜ், டிமாண்ட் சார்ஜ் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்.டி நுகர்வோர், ஹெச்.டி நுகர்வோரும் பிக்ஸ்டு சார்ஜ், டிமாண்ட் சார்ஜ் கட்டணம் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மின்சார வாரியம், முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் அரசு பரிசீலிக்கும். வரும் 2 நாட்களில் அதற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இறுதி செய்து, ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும்.
கோவைக்கு வரும் முதல்வருக்கு 1.50 லட்சம் பேர் வரவேற்பு அளிக்க உள்ளனர். தமிழக அரசின் வரலாற்றில், ஓர் அரசு நிகழ்ச்சியில் 1.07 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது இதுவே முதல்முறை. முதல்வரின் பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடி, தோரணம், அலங்கார வளைவுகள் இருக்கக்கூடாது என முதல்வர் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார். நிகழ்ச்சி முடியும் வரை கொடி, தோரணம், அலங்கார வளைவுகள் இருக்காது. எளிமையாக, மக்களுக்கு பயன் உள்ள நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி இருக்கும்.
மின் கட்டண உயர்வில் சிறு, குறு நிறுவனங்களுக்கு சலுகைகள் கொடுக்கும் நிலையில் மின்சார வாரியம் இல்லை. பிக்ஸ்டு சார்ஜ், டிமாண்ட் சார்ஜ் அதிகம் என சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தெரிவித்த கருத்து பரிசீலிக்கப்படும். இதை தவிர, மற்ற வகை மின் கட்டண உயர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை.
நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி பாஜக. அவர்களை திமுகவுடன் ஒப்பிடக் கூடாது. யாருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது, யாரை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர், யார் மக்களுக்கான இயக்கம் நடத்துகிறார், மக்களுக்கான ஆட்சி செய்கிறார் என்பதை பார்த்து செய்தியாளர்கள் முக்கியத்துவம் தர வேண்டும்” என்று அவர் கூறினார்.