கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மைதிலி வினோ இவர் பாஜகவில் மாநில மகளிர் அணி செயலாளராக இருந்து வந்தார். இன்று அக்கட்சியின் கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கட்சி அடிப்படை பொறுப்பில் இருந்து மைதிலி வினோவை நீக்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து மைதிலி வினோ செய்தியாளர்களிடம் பேசுகையில், 1999ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து இக்கட்சியில் மகளிர் அணி இல்லாத காலக்கட்டத்திலிருந்து நான் வந்திருக்கிறேன்.தாமரை சின்னம் என்னவென்றே தெரியாதபோது மக்களிடம் கொண்டு சென்றவள் நான். தற்போதைய பாஜக, பணத்திற்கு விலை போய்விட்டது .பாஜகவில் பணி செய்து முன்னேறுவோம் என அன்றைய கோட்பாடு இருந்தது,ஆனால் தற்போது 300 கோடி அளவில் பணம் இருந்தால் மாவட்ட தலைவர் ஆகிவிடலாம் என்ற கோட்பாடு வந்திருக்கிறது.
இரு நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்க்க சென்றேன்.அப்போது அங்கு எடுத்த புகைப்படத்தை வைத்து பாஜக கோவை மாவட்ட தலைவர் அறிக்கை ஒன்று வெளியிட்டு, அதில் பாஜக கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.அமைச்சரை பார்த்ததற்காக கட்சியில் இருந்து நீக்கினால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கட்சி ரீதியாக கட்ட பஞ்சாயத்து போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டதுபோல் கூறுகிறார்கள்., இதற்கு மாவட்ட தலைவர் விளக்கமளிக்க வேண்டும்.
நான் ஒவ்வொரு கள பணிகள் செய்துதான் பாஜகவில் பதவி வாங்கினேன். ஆனால் தற்போது பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் பதவி. என்னை மாதிரி அதிக நபர்கள் பாஜகவில் கஷ்டப்பட்டிருக்கின்றனர்.பாஜகவில் பழைய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றாலும் கேவலப்படுத்தாமல் இருக்கலாம். பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இருந்து வெளியில் வர வாய்ப்புள்ளது. கொள்கைக்காக இருந்த கட்சி தற்போது பணத்திற்காகக விலை போய்விட்டது.
மாநில பொறுப்பு வேண்டுமென்றால் மாதம் 50 ஆயிரம், மாவட்ட பொறுப்பிற்க்கு 10 ஆயிரம், மண்டல பொறுப்பிற்கு 5 ஆயிரம் என மாதந்தோறும் செலவு செய்ய வேண்டும். அண்ணாமலையின் வேகத்திற்கு புதிய ஆட்களும் தேவை, அதேபோல் அனுபமும் தேவை. இதற்கு முன் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. தற்போது நான் திமுகவுக்கு செல்கிறேன் என்று கூறியதும் கட்சிக்கு களங்கம் என்கிறார்கள். நாளை முதலமைச்சரை சந்தித்து திமுகவில் இணைவேன். இனி திமுகவில் மட்டும்தான் இருப்பேன்” என்றார்.