புதுடெல்லி: பணமோசடி என்பது நேர்மையற்ற தொழிலதிபர்கள் மட்டுமின்றி தீவிரவாத அமைப்புகளாலும் செய்யப்படும் குற்றமாகும். இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. அதே நேரம், அரசு தனது அரசியல் வெறுப்புணர்வு, பழி வாங்கலுக்கு இச்சட்டத்தையும் அரசு அமைப்புகளையும் பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.இதனிடையே, பண மோசடி சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, அமலாக்கத்துறைக்கு உள்ள அதிகாரம் ஆகியவை தொடர்பாக 200க்கு மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த நீதிபதி ஏஎம். கன்வீல்கர் தலைமையிலான அமர்வு, அமலாக்கதுறையினரால் தாக்கல் செய்யப்படும் தகவல் அறிக்கை குற்றவியல் தண்டனை சட்டங்களில் கீழ் வரும் முதல் தகவல் அறிக்கைக்கு ஒப்பானது என்று கூறமுடியாது. இருப்பினும், அமலாக்கத்துறை அறிக்கையை ஒவ்வொரு முறையும் சமர்பிப்பது கட்டாயமல்ல. கைது நடவடிக்கையின் போது தெரிவித்தால் மட்டுமே போதுமானது,’’ என்று தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி என்வி. ரமணா ஒப்புதல் தெரிவித்தார்.