பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் பல இடங்களில், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்புவரை குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டிருந்தது. சில இடங்களில் மின்கம்பத்தில் உள்ள மின் இணைப்பு கட்டையில் இருந்து மின் இழை துண்டிப்பு ஏற்பட்டதால், மின்தடை அவ்வப்போது ஏற்பட்டது. நகர்ப்புறம் மட்டுமின்றி பல்வேறு கிராம பகுதியிலும் மின் அழுத்த குறைபாடு அடிக்கடி ஏற்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, நகர் மற்றும் கிராம பகுதிகளில் மின் அழுத்த குறைப்பாட்டை போக்க, ஏற்கனவே குறைவான மின்திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களை அகற்றி, அதற்கு பதிலாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க மின்வாரியத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, எந்தெந்த இடங்களில் கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கலாம், பழைய டிரான்ஸ்பார்மர்களை அகற்றி புதிய டிரான்ஸ்மார்மர்கள் அமைக்கலாம் என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுத்தனர். இந்த ஆய்வை தொடர்ந்து, பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் மார்ச்சநாயக்கன்பாளையம், தாளக்கரை முத்தூர், சமத்தூர், பெதப்பம்பட்டி, கோமங்கலம் உள்ளிட்ட துணை மின்நிலையத்திற்குட்பட்ட நகர் மற்றும் கிராம பகுதிகளில், தேவையான டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை, பல்வேறு வகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர்கள் ஏற்படுத்தப்பட்டள்ளது.அதுபோல், நகராட்சிக்குட்பட்ட பகுதி மற்றும் கிராமப்புறங்களில் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டதன் அடிப்படையில், பழுதான மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 7 மாதங்களில் 498 மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பழுதான கம்பங்கள் எவை? எவை? என கணக்கெடுக்கும் பணியும், விடுபட்டிருந்தால் உடன் அதனையும் மாற்றியமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுகிறது.
இதுமட்டுமின்றி, விவசாய பயன்பாட்டிற்கு தேவைக்கான சுமார் 1000 கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த கம்பங்கள், ஜோதிநகர் மைதானம் அருகே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, உடன் விவசாய மின் இணைப்பு உடனுக்குடன் கொடுப்பதற்கு, மின்கம்பம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில் தற்போது குடியிருப்புகள் அதிகரித்துள்ளது. குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளுக்கு, தொடாந்து தடையில்லா மின்வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின் அழுத்த குறைபாடுகளை போக்க புதிதாக, பொது இடம் மற்றும் தொழிற்சாலையருகே, விவசாய பகுதியருகே என பல்வேறு இடங்களில் டிரான்ஸ்மார்பர்கள் அமைக்கப்படுகிறது. ஏற்கனவே, நகர் மற்றும் கிராமங்களில் எந்தெந்த இடங்களில் டிரான்ஸ்மார்மர்கள் அமைக்க வேண்டும் என்று கணக்கெடுக்கப்பட்டது.
100 கேவிஏ மின் திறன் கொண்ட பழைய டிரான்ஸ்பார்மர்கள் பதிலாக 200 மின்திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் மாற்றியமைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தாலுகாவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின் வினியோகம் சீராக இருக்க பழைய மின்கம்பிகள் இருந்தால் அதனை மாற்றி புதிய கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின்நுகர்வோர் தெரிவிக்கும் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், அதனை விரைந்து சீர்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.