உலகின் மிக இளம்வயது பெண் பிரதமர் என்ற சிறப்புக்குரியவர் சன்னா மரீன். 2019-ம் ஆண்டு 34 வயது நிரம்பிய இவர் ஃபின்லாந்து பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்லாந்தின் ஆளும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
உக்ரைன் ரஷ்யா போரின் விளைவாக, மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து இணைய இவர் எடுத்துவரும் முயற்சியால் அனைவராலும் அறியப்பட்டவர்.
கடந்த வாரங்களில் அடுக்கு மாடு குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பார்ட்டியில் பங்கேற்ற சன்னா மரீன், மது அருந்தியபடி நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
அந்த நாட்டின் தலைப்புச் செய்தியானது, பிரதமரின் பார்ட்டி கொண்டாட்டம். அது அவரது பதவிக்கு அவமரியாதையையும் களங்கத்தையும் ஏற்படுத்திவிட்டதாக சில பின்லாந்து ஊடகங்கள் கண்டனம் தெரிவித்தன, பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
2020-ம் ஆண்டு பேஷன் இதழ் ஒன்றுக்கு லோ கட் ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியாக இவர் போஸ் கொடுத்தற்கு, அவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. அடுத்து இந்த சர்ச்சையிலும் அவருக்கு கடும் விமர்சனங்கள் வந்துள்ளன.
“உயரிய பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி செய்வது சரியல்ல” என்ற கண்டன குரல்கள் பின்லாந்தில் எழுந்தன. விருந்துக்கு செல்வதற்கு அதிக செலவு செய்கிறார் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் நெட்டிசன்கள்.
தொடர்ந்து வந்த விமர்சனத்தில், பிரதமர் போதைப்பொருளை பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி சிலர் விளக்கம் கேட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த பிரதமர், தான் மது மட்டுமே அருந்தியதாகக் கூறினார். “என் வாழ்நாளில், என் இளமையில் கூட, நான் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்தியதில்லை” என்று அவர் கூறினார். போதைப்பொருள் உட்கொள்வதை மறுத்ததுடன், விருந்தில் கலந்து கொண்டவர்கள் யாருமே போதைப்பொருள் பயன்படுத்தியதை தான் பார்க்கவில்லை என்றார்.
“நண்பர்களுடன் அந்த மாலை நேரத்தை செலவிட்டேன்” என்றும், ’’அந்த வீடியோக்கள் தனியார் வளாகத்தில் படமாக்கப்பட்டது” என்றும் கூறினார்.
சந்தேகத்தை தெளிவுபடுத்த, பிரதமர் சன்னா மரின் ஆகஸ்ட் 19 அன்று மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டார். அன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சந்தேகங்களைத் தீர்க்க, நான் இன்று போதைப்பொருள் பரிசோதனையை மேற்கொண்டேன். என் வாழ்நாளில், என் இளமையில் கூட, நான் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்தியதில்லை” என்று அவர் கூறினார்.
மருந்து சோதனையில் பின்லாந்தின் பிரதமர் போதைப்பொருளை பயன்படுத்தவில்லை என்று ரிசல்ட் வந்திருப்பதை, அவரது அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
சன்னா மரின் சிறுநீர் மாதிரியில் கோகோயின், ஆம்பெடமைன், கஞ்சா, ஓபியாய்ட்ஸ் போன்ற எந்த போதைப்பொருளும் இல்லை என பரிசோதனை முடிவு தெரிவித்துள்ளதை, பிரதமரின் சிறப்பு ஆலோசகர் ஐடா வல்லின் தெரிவித்துள்ளார்.