திருச்சியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ஒருவர் முதுகலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தமிழக முதலமைச்சர் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
இதனையடுத்து, கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரனை கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை உயர்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அறிக்கை அனுப்பப்பட்டு பல நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் ஆதரவு அளித்துள்ளனர். மேலும், பேராசிரியருக்கு எஸ்.சி., எஸ்.டி பேராசிரியர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஆங்கிலத் துறைப் பேராசிரிய பேராசிரியைகள் அனைவரும், துறைத் தலைவரின் செயல்பாடுகள் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும், அவர் துறைத் தலைவராக இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்றும் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.