புதுடெல்லி: பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேருக்கு குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2008-ல் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த இவர்களுக்கு, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் கடந்த 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
குஜராத் அரசின் இந்த நடவடிக்கை பெரிதும் சர்ச்சைக்கு உள்ளானது. நடப்பு கொள்கையின் கீழ் இவர்களது மனுக்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. 11 பேரின் விடுதலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதற்கிடையில், 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதற்கு எதிராக மார்க்சிஸ்ட் பிரமுகர் சுபாஷினி அலி உள்ளிட்ட 3 பேர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கறிஞர் அபர்ணா பட் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனரா?” என தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.
இதற்கு கபில் சிபல், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் தவறாகக் கூறவில்லை. தண்டனைக் குறைப்பை மட்டுமே எதிர்க்கிறோம்” என்றார். இதையடுத்து இந்த மனுவை தலைமை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.
பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவர் தண்டனைக் குறைப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தண்டிக்கப்பட்டபோது நடைமுறையில் இருந்த, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் அவரது மனுவைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
தண்டனைக் குறைப்பு விவகாரங்களில் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியில் நடைமுறையில் உள்ள தண்டனைக் குறைப்பு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என ஹரியாணா மாநிலம்-ஜகதீஷ் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைப் பின்பற்றியே கடந்த மே மாதம் குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.