புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ சம்பத் பேசுகையில், ‘ஆளுநர் உரையை கேட்பதற்கு இனிமையாக இருந்தது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் தான் ஆளுநரின் உரை இருந்தது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத்தியில் இருந்து நிதி கிடைக்கும் என மக்களிடம் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் எந்த நிதியும் வரவில்லை.என்றார்.
அப்போது அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் குறுக்கிட்டு கூட்டணியில் இருப்பதால் தான் மத்தியில் இருந்து நிறைய நிதி வந்துள்ளது. சாலை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. எவ்வாறு ஆதாரம் இல்லாமல் பேசலாம் கேள்வி எழுப்பினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து துணை சபாநாயகர் ராஜவேலு அனைவரையும் அமரும்படி அறிவுறுத்தினார். இருப்பினும் ஆளுநர் உரை மீது பேசுவதற்கு இடமளிக்காததைக் கண்டித்து திமுக-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.