மகாராஷ்டிரா அரசியல் குழப்ப விவகாரம், உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்திவந்த நிலையில் திடீர் திருப்பமாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் தனக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்து தற்பொழுது முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார்.
ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவருக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகர் அனுப்பிய சம்மனுக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த மனு, ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சியமைக்க மகாராஷ்டிர மாநில ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிரான மனு, சிவசேனா கட்சியை சொந்தம் கொண்டாடி ஏக்நாத் ஷிண்டே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்த மனு மீது விசாரணை நடத்த தடை விதிக்க கோரி உத்தவ் தாக்கரே தொடர்ந்த மனு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்த வழக்குகள் அரசியல் சாசன சட்ட பிரிவுகள் தொடர்புடைய வழக்குகளாக இருப்பதால் இவற்றை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா வேண்டாமா என்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கினை விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், மகாராஷ்டிரா அரசியல் குழப்ப விவகாரத்தை உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
மேலும் நாளை மறுநாள் வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரேவிற்கா அல்லது ஏக் நாத் சிண்டேவிற்கா என்பது தொடர்பான தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடதக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM