ஹைதராபாத்: குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தெலங்கானா கோஷமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைது செய்யப்பட்டார்.
இவர் அண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த முனாவர் ஃபரூக்கி ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியை விமர்சித்துப் பேசியிருந்தார். இதனை அவர் ஒரு வீடியோவாக வெளியிட்டார். அந்த வீடியோ வெளியாகி வைரலாக அதற்கு அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். நள்ளிரவில் ஹைதராபாத் நகரம் முழுவதும் போராட்டங்கள் பரவியது. இதனையடுத்து தபீர்புரா காவல்நிலையம் ராஜா சிங் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில், ராஜா சிங் வீட்டினுள் காவல் துறையினர் நுழைந்து அவரை கைது செய்தனர். கைதாகும் சில நிமிடங்களுக்கு முன்னர் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர், “அந்த வீடியோவில் நான் ஏதேனும் கடவுளின் பெயரைக் குறிப்பிட்டுள்ளேனா? இல்லை, ஏதாவது சமிக்ஞையாவது குறிப்பிட்டிருக்கேனா? ஆனால், ஃபரூக்கி மிக மோசமாக கடவுளர் ராமர், சீத்தாமாவை விமர்சிக்கிறார். ஆளும் டிஆர்எஸ் கட்சி பாஜகவின் குரலை நெறிக்கிறது. நான் எனது நம்பிக்கைக்காக போராடுகிறேன். முதலில் எனது நம்பிக்கை. அப்புறம்தான் எனது அரசியல். நான் எதுவுமே சர்ச்சைக்குரிய விதத்தில் பேசாமலேயே எனது வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நான் இன்னொரு வீடியோவும் வெளியிடுவேன்” என்று கூறியிருந்தார்.
மேலும், “இந்துக் கடவுளரை அவமதிப்போருக்கு போலீஸ் எப்படி பாதுகாப்பு கொடுக்கிறது. எனது பேச்சு ஃபரூக்கியின் மொழியில் இருந்தது” என்று அவர் வினவியிருந்தார்.
அண்மையில் நூபுர் சர்மா பேசிய பேச்சால் எழுந்த சர்ச்சையே இன்னும் நீள்கிறது. ரஷ்ய உளவுப் படையினரால் கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி, முகமது நபிகளை அவமதித்துப் பேசியதற்கு பழிவாங்கவே இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதலுக்கு துருக்கியில் பயிற்சி பெற்றதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தெலங்கானா கோஷமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.