முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: பாஜக எம்எல்ஏ அதிரடி கைது!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த, தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோஷாமால் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங், ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கி என்பவரை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவில், பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மாவை போல், நபிகள் நாயகம் குறித்து எம்எல்ஏ ராஜா சிங் அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் நேற்றிரவு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக திரண்ட அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீது முகமது நபிக்கு எதிராக அவதூறான கருத்து தெரிவித்ததற்காக இன்று காலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து விளக்கம் அளித்த எம்எல்ஏ ராஜா சிங், “எதன் அடிப்படையில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர் என்பது எனக்கு புரியவில்லை. எனது வீடியோ பரூக்கியை இலக்காகக் கொண்டது. நான் வீடியோவில் கூறிய வார்த்தைகளில் உறுதியாக நிற்கிறேன். ஆனால், யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தவில்லை. இது வீடியோவின் முதல் பகுதி மட்டுமே, இரண்டாவது வீடியோவும் விரைவில் வரும்” என தெரிவித்தார்.

இதற்கிடையே, பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜங்கவுன் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.