மும்பை: “இந்த முடிவை யார் எடுத்திருந்தாலும், அவர்கள் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளின் முன்விடுதலையை மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யுடி சால்வி விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்த குற்றவாளிகள் 11 பேரையும், 14 வருடங்களுக்கு முன்பு அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தவர் முன்னாள் நீதிபதி யுடி சால்வி.
தற்போது அந்த 11 பேரும் குஜராத் அரசால் முன்விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து அவர் கூறுகையில், “அந்த வழக்கில் ஒவ்வொரு விஷயங்களும் கவனமாக ஆராயப்பட்டது. அந்த 11 குற்றவாளிகளுக்கும் அனைத்து சாட்சியங்களின் அடிப்படையில்தான் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அரசாங்கம் என்ன நினைத்தது என்பது தான் தற்போதைய கேள்வியே.
குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு அரசாங்கத்திற்கும் அதிகாரம் உண்டு. ஆனால், முடிவு எடுப்பதற்கு முன்பு அனைத்து காரணிகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் இல்லையேல், முடிவு என்பது சரியாக இருக்காது. இந்த விவகாரத்தில் அவர்கள் நடைமுறைகளை கடைபிடித்தார்களா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.
இந்த வழக்கை விசாரித்தவர்களிடம் அவர்கள் கேட்டிருக்க வேண்டும். இதுபற்றி என்னிடம் எதுவும் கேட்கப்படவில்லை. இந்த வழக்கினை சிபிஐ விசாரணை நடத்தியது. இதுபோன்ற வழக்குகளில் மாநில அரசு, மத்திய அரசின் ஆலோசனையையும் கேட்டிருக்க வேண்டும். அப்படி மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கப்பட்டதா என்பது எனக்கு தெரியவில்லை. கேட்கப்பட்டது என்றால் மத்திய அரசு என்ன பதில் சொன்னது?” என்று நீதிபதி கேள்வியும் எழுப்பியுள்ளார்.
ஆளும் பாஜக தொடர்புடைய குழு ஒன்றால், குற்றவாளிகள் 11 பேரும் இனிப்பு வழங்கி மாலைகள் போட்டு வரவேற்கப்பட்டதையும், பாஜக எம்எல்ஏ ஒருவர் அவர்கள் பிராமணர்கள் நல்ல சன்ஸ்கரா உள்ளவர்கள் என்று கூறியதையும் நீதிபதி சால்வி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், “இவற்றைத் தாண்டி குற்றவாளிகள் 11 பேருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது தவறு. சிலர் இதனை இந்துத்துவத்தின் பகுதியாக பார்க்கிறார்கள், அவர்கள் இந்துவாக அதைச் செய்துள்ளனர். இது தவறு. சிலர் அவர்கள் பிராமணர்கள் என்று கூறியுள்ளனர். இப்படி கூறுவது சரியா?
தற்போது சில தலைவர்கள் இவ்வாறு செயல்பாடுகிறார்கள் அவர்கள் ஒரு சித்தாந்தத்தை பின்பற்றுகின்றனர். ஏனெனில் மக்களும் ஒரே சித்தாந்தத்தை பின்பற்ற விரும்புவதால் அவர்கள் இப்படி செய்கிறார்கள்.
ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கும்போது, அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களையும் நடந்த குற்றத்தை பற்றியும் சிந்திக்க வேண்டும். இந்த வழக்கில் அப்படி நடக்கவில்லை என்று நினைக்கிறேன்.
விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் தங்களின் குற்றத்தினை உணர்ந்தார்களா, அதற்காக மன்னிப்பு கேட்டார்களா? அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் மாலை மரியாதைகளையும் ஏற்றுக் கொண்டனர். இது அவர்கள் தாங்கள் செய்த செயலுக்காக வருந்தவில்லை என்பதையே காட்டுகிறது” என்று முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆக.15-ம் தேதி இந்திய சுதந்திரத்தின் பவள விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகள் கோத்ரா துணை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். குஜராத்தில் ஆளும் பாஜக அரசு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.