ஆப்பிள் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐபோன்14 விரைவில் இந்திய தயாரிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் சென்னையிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு தீபாவளி பண்டிகை காலத்தில் இந்த புதிய ரக கைப்பேசியை ஆப்பிள் நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வெளியீடுகள் குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக வைக்கிறது. வெளியீட்டுக்கு ஒரு சில நாட்கள் முன்பே சந்தையில் வரவுள்ள தனது புதிய வெளியீடுகள் குறித்த தகவல்களை அந்த நிறுவனம் வெளியிடுகிறது. இதுவரை சைனாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஐபோன் ரகங்களை இந்தியாவில் வெளியிடுவதையே ஆப்பிள் நிறுவனம் தனது வழக்கமான நடைமுறையாக கொண்டுள்ளது. அதுபோல வெளியீடு நடைபெற்ற ஆறு அல்லது ஒன்பது மாதங்களுக்குப் பின் சென்னை அருகே உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் அந்த ஐபோன்களை அசெம்பிள் செய்து வெளியிடுகிறது.
ஆனால் தற்போது பல்வேறு காரணங்களால் அடுத்த மாதம் சைனாவில் அசம்பிள் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஐபோன்14 புதிய ரக கைப்பேசியை விரைவாக சென்னை அருகே உள்ள ஃபாக்ஸ் கான் தொழிற்சாலையில் ஒருங்கிணைத்து இந்தியாவில் விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்காக சீன அரசு கடுமையான பொதுமுடக்கங்களை அடிக்கடி அமல்படுத்துவதால், அந்த நாட்டில் பெரும்பாலான உற்பத்தியை நடத்தும் ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இதைத் தவிர சீன அரசு மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையே சமீப காலங்களாக தைவான் முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் இதனால் கவலையுடன் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், தான் சென்னை அருகே உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை சீனாவில் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் நிலையில் சிறந்த மாற்றாக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது. ஆகவே செப்டம்பரில் வெளியாக உள்ள ஐபோன்14ஐ தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய வழக்கமான 6 முதல் 9 மாத இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டாம் என அந்த அமெரிக்க நிறுவனம் கருதுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாகங்களை கொண்டு ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டிலேயே ஐபோன் 14 கைபேசிகளை அசெம்பிள் செய்து இந்திய சந்தையில் விநியோகம் செயலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. ரகசியங்கள் கசியாமல், திட்டமிட்ட நேரத்தில் ஐபோன்14 கைபேசிகள் தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் அசம்பிள் செய்யப்பட்டால், பின்னர் பிற நாடுகளுக்கு இந்த கைபேசிகளை ஏற்றுமதி செய்யலாம் எனவும் ஆப்பிள் திட்டமிட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக சீனாவில் இருந்து புதிய ஆப்பிள் கைபேசி வகைகள் வெளியிடும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் அசம்பிள் செய்து புதிய மாடல்களை வெளியிடலாம் என ஆப்பிள் கருதுகிறது. ஆகவே சிக்கல்கள் இன்றி மேட்-இன்-சென்னை ஐபோன் 14 வெளியானால், பின்னர் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி தமிழ்நாட்டில் பெருமளவு அதிகரிக்க புதிய வாய்ப்பு உருவாகும் என வல்லுநர்கள் ஃபாக்ஸ்கான் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
– புது டெல்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM