புதுச்சேரி: வீடு கட்டும் திட்டத்தில் காமராஜர் பெயரை நீக்கியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரி சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
2022-23ம் ஆண்டுக்கான் புதுச்சேரி நிதிநிலை அறிக்கையை அம்மாநில முதல்வரும், நிதியமைச்சருமான ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் “கல் வீடு கட்டும் திட்டம் காமராஜர் பெயரில் இருந்தது. தற்போது இத்திட்டத்தை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என பெயர் மாற்றிவிட்டனர். மாநில அரசு இதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்குகிறது. மத்திய அரசு ஒன்றரை லட்ச ரூபாய்தான் தருகிறது. எனவே, காமராஜர் பெயரையே திட்டத்துக்கு வைக்க வேண்டும்” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, விவியன்ரிச்சர்ட் ஆகியோர் எழுந்து செந்தில் குமாரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, செந்தில்குமாருக்கு ஆதரவாக நாஜிம், எதிர்கட்சித் தலைவர் சிவா பேசினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம், காரசார விவாதம் நடந்தது.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் செல்வம், “கடந்த ஆட்சியில் கல் வீடு கட்ட நிதியே தரவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற பின்னர்தான் நிதி வழங்கப்படுகிறது என்றார். மேலும், அமைச்சர் நமச்சிவாயம்: இந்த பெயர் மாற்றம் கடந்த ஆட்சியில் தான் நடந்தது. அந்த ஆட்சியில் கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தது. நீங்களும்தான் ஒத்துக்கொண்டீர்கள் என கூறினார்.
பின்னர் பேசிய எதிர்கட்சித் தலைவர் சிவா, “கடந்த ஆட்சியில் அமைச்சரவையில் நீங்களும்தான் (நமச்சிவாயம்) இடம் பெற்றிருந்தீர்கள்” என கூறினார். இப்படியாக ஒருவருக்கொருவர் மாறி, மாறி புகார் கூறி கொண்டனர்.
மேலும் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், “காமராஜர் பெயரை மட்டுமில்லாமல் எம்எல்ஏக்கள் பரிந்துரை செய்து கையெழுத்திடலாம் என்ற பகுதியையும் எடுத்து விட்டனர். இதனால் எம்எல்ஏக்கள் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் உரிமையாவது தாருங்கள்” என்ற கூறினர்.
நேரமின்மை காரணமாக அனைவரையும் அமரச் சொல்லி பேரவைத்தலைவர் செல்வம் உத்தரவிட்டார்.