துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அடுத்த மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசிலும், கட்சியிலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக, நம்பர் 2 இடத்தில் இருப்பவர், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி மதுபானக் கொள்கை விதிமீறல் தொடர்பாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில், சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சிபிஐ சோதனையில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, மதுபானக் கொள்கை விதிமீறல் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு தாக்கல் செய்தனர். அதில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா முதல் நபராக சேர்க்கப்பட்டு உள்ளார். அவரைத் தொடர்ந்து, மேலும் 14 பேரும் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கில், மணீஷ் சிசோடியா எந்நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று, குஜராத் மாநிலம் பவ்நகர் என்ற இடத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இதன் காரணமாகத் தான், மணீஷ் சிசோடியாவை சிபிஐ அமைப்பு மூலம் குறிவைத்து உள்ளனர். அடுத்த 10 நாட்களுக்குள் மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் வந்தது. ஆனால், நீங்கள் (பொது மக்கள்) கொடுக்கும் ஆதரவு மற்றும் வரவேற்பை பார்த்தால், அவர் அடுத்த 3 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பேசுகையில், “அதிகரித்து வரும் மக்கள் ஆதரவு தன்னை பாஜகவின் இலக்காக மாற்றி உள்ளது. மத்திய பாஜக அரசு, என் கழுத்தில் பிடியை இறுக்குவதற்கு உங்கள் கோபமும், உற்சாகமும் தான் காரணம். ஆனால் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்றார்.