Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் திருமணமானது. முதல் நாளிலிருந்தே என் உடல் தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. பதற்றம், பயம் காரணமாக அப்படியிருக்கலாம் என ஒவ்வொரு நாளையும் கடந்து கொண்டிருக்கிறேன். இதை வெளியிலும் சொல்ல முடியவில்லை. கணவர் அனுசரணையோடு இருப்பதால் பிரச்னை இல்லை என்றாலும் இது தொடர்கதையாகுமோ என பயமாக இருக்கிறது. எனக்கு என்ன பிரச்னையாக இருக்கும்…. தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறியை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு இருப்பது ‘வெஜைனிஸ்மஸ்’ (Vaginismus) என்கிற பிரச்னையாக இருக்கலாம் என்று தெரிகிறது.
முதல்முறை தாம்பத்திய உறவின்போது, உறவுக்கு உங்கள் உடல் ஒத்துழைக்காது. வெஜைனா தசைகள் சுருங்கிக் கொள்ளும். இந்த விஷயத்தில் உங்கள் கணவரின் ஒத்துழைப்பும், உங்களை அவர் புரிந்துகொள்ள வேண்டியதும் மிக முக்கியம். அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
‘வெஜைனிஸ்மஸ்’ பிரச்னையானது தாம்பத்திய உறவின்போது மட்டும்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை. மருத்துவப் பரிசோதனைக்காக மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போது, மருத்துவர், அந்தரங்க உறுப்பை டெஸ்ட் செய்ய முனையும்போது நீங்கள் அதற்கு ஒத்துழைக்க மாட்டீர்கள்.
திருமணமாகாத பெண்ணாக இருந்து, பீரியட்ஸின்போது டாம்பூன் அல்லது மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிக்க நினைத்தாலும் அதற்கு உங்கள் உடல் ஒத்துழைக்காது. கஷ்டப்பட்டு அதைப் பொருத்திக்கொள்ள முனையும்போது உங்களுக்கு எரிச்சலும் வலியும்தான் மிஞ்சும். இந்த அறிகுறிகளைவைத்து உங்களுக்கு ‘வெஜைனிஸ்மஸ்’ இருப்பதை உறுதிசெய்யலாம்.
சிறுவயதில் நீங்கள் சந்தித்த பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், முதல்முறை தாம்பத்திய உறவு ஏற்படுத்திய கசப்பான அனுபவம், செக்ஸ் உறவை நினைத்தாலே வெறுப்பும் பதற்றமும் ஏற்படுவது, வெஜைனா, கர்ப்பவாய்ப் பகுதி போன்றவற்றில் ஏதேனும் தொற்று இருப்பது போன்று இப்பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
‘வெஜைனிஸ்மஸ் பிரச்னையை 95 சதவிகிதம் குணப்படுத்த முடியும். மருத்துவரை அணுகி முதலில் உங்கள் பிரச்னை பற்றி பேச வேண்டும். எடுத்த உடனே மருத்துவர் உங்கள் அந்தரங்கப் பகுதியில் கைவைத்துப் பரிசோதிப்பாரோ என பயப்பட வேண்டாம்.
தாம்பத்திய உறவு குறித்த உங்களது பயம், பதற்றம் போன்றவற்றைப் போக்கவும் சிகிச்சை அவசியம். அடுத்து மருத்துவர் உங்களுக்கு சில பயிற்சிகளைக் கற்றுத் தருவார். அதாவது தாம்பத்தியத்துக்கு ஒத்துழைக்காத வெஜைனா தசைகளைத் தளர்த்துவதற்கான பயிற்சிகள் அவை.
உங்களுடைய கடந்தகால கசப்பான அனுபவங்களைப் பேசவைத்து உங்களை அந்தக் கசப்பிலிருந்து மீட்கும் ‘டாக்கிங் தெரபி’ உங்களுக்கு வழங்கப்படும். மெள்ள மெள்ள உங்களால் அதிலிருந்து மீள முடியும். அடுத்து ‘புரொக்ரசிவ் டீசென்சிட்டைசேஷன் தெரபி’ அளிக்கப்படும். பிரத்யேக கருவிகள் கொண்டு உங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை இது.
உங்களுக்கு இப்படியொரு பிரச்னை இருப்பதை முதலில் மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசித்து, சிகிச்சைகளைத் தொடங்குங்கள். அதைத் தவிர்க்கும்பட்சத்தில் வெஜைனிஸ்மஸ் பாதிப்பால் உங்களுக்கும் உங்கள் கணவருக்குமான உறவில் இணக்கமிருக்காது. இந்தப் பிரச்னை இள வயதில், ஒரு குழந்தை பெற்ற பிறகு, மெனோபாஸ் வயதில் என எப்போது வேண்டுமானாலும் வரலாம். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சிகிச்சை எடுத்தால் முழுமையான குணம் உண்டு. கவலை வேண்டாம்.