பொதுவாக குங்குமத்தை கடைகளில் வாங்கியே பயன்படுத்துவோம். அது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, நெற்றியில் அரிப்பு, அலர்ஜி என உண்டாக்கும். சிலருக்கு நெத்தியில் குங்குமம் வைக்கும் இடத்தில் சருமம் நிறம் மாறி தடம் விழுந்துவிடுவதும் உண்டு.
இதுவே இயற்கை சார்ந்த பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே குங்குமம் தயாரித்து பயன்படுத்தினால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் சேலத்தை சேர்ந்த இயற்கை சார்ந்த உணவு மற்றும் வாழ்வியல் பொருள்களை தயாரிக்கும் திவ்யாபாரதி.
குங்குமம் தயாரிக்கத் தேவையான பொருள்கள்
1. மஞ்சள் தூள் – 50 கிராம்
2. வெண்காரம் – 25 கிராம்
3. படிகாரம் – 25 கிராம்
4. எலுமிச்சை – 3
5. நல்லெண்ணெய் – சிறிதளவு
* மூன்று எலுமிச்சையையும் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு சிறிய பாத்திரத்தில் மஞ்சள் தூளுடன், வெண்காரம், படிகாரம் சேர்த்து நன்கு கலக்கவும். இவற்றுடன் தண்ணீர்போல எதையும் சேர்க்கக் கூடாது.
* மேலே சொன்ன கலவையுடன் எலுமிச்சை சாறும் சேர்த்து, தூள் பதத்திற்கு (புட்டு மாவு போன்று ) மட்டும் பிசைந்து கொள்ளவும்.
* கலந்து வைத்த தூளை சிறிது நேரம் அப்படியே ஆறவிடவும். எலுமிச்சை சாற்றின் ஈரப்பதம் குறைந்ததும் 8 டீஸ்பூன் நல்லெண்ணெய், அல்லது தூளாக இருப்பதற்குத் தேவையான அளவுக்கு நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
* இந்தக் கலவையை இரண்டில் இருந்து மூன்று நாள்களுக்கு நிழலில் உலர்த்தவும். நன்றாக ஈரப்பதம் குறைந்து, குங்குமம் பதத்துக்குத் தயாராகிவிடும். அதன் பின் எடுத்துப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: கண்டிப்பாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் தூளை பயன்படுத்தவும். அல்லது மஞ்சளாக வாங்கி அரைத்தும் பயன்படுத்தலாம். அப்போதுதான் குங்குமத்தின் நிறம் நன்றாக வரும். கூடுதலாக நிறம் தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை அளவிற்கு மட்டும் சுண்ணாம்பு சேர்த்துக் கொள்ளலாம்.