கடந்த சில நாட்களாக த்ரிஷா அரசியலுக்கு வருகிறார்; அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார்; காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பிரபலமான திரைத்துறையினருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுவருகின்றன. இதையொட்டியே தங்கள் கட்சியில் த்ரிஷாவை சேரச் சொல்லி காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது என பலவிதமாக பேச்சுகள் எழுந்தன.
காங்கிரஸில் ஸ்டார் வேல்யூ அந்தஸ்தில் இருந்த குஷ்பு, காங்கிரஸிலிருந்து விலகி தற்போது பா.ஜ.க.வில் இருக்கிறார். காங்கிரஸில் உள்ள மற்றொரு நடிகையான நக்மாவும், அந்தக் கட்சியின்மீது அதிருப்தியில் இருக்கிறார். இப்படியொரு சூழலில் காங்கிரஸை வலுப்படுத்த நடிகை த்ரிஷாவை தங்கள் கட்சியில் சேரச் சொல்லி காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது என தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், ”எங்கள் கட்சியில் அப்படியொரு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. ஆனால், மதசார்பின்மையையும் காங்கிரஸ் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு த்ரிஷா வந்தால் வரவேற்போம்.” என தன் கருத்தை தெரிவித்திருந்தார். த்ரிஷா இப்போது மணிரத்னத்தின் `பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். இதன் முதல் பாகம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதனையத்து `தி ரோடு’ என்ற ஹீரோயின் சென்ட்ரிக்கிலும், `பிருந்தா’ என்ற வெப்சீரீஸிலும் அவர் மும்முரமாக நடித்து வருகிறார். விஜய்- லோகேஷின் `விஜய்-67′ படத்திலும் த்ரிஷா இருக்கிறார் என்ற பேச்சு பரப்பரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் அரசியலில் குதிக்கப் போவதாக செய்திகள் வந்ததையொட்டி அதிர்ச்சியில் இருக்கிறார் த்ரிஷா.
இதுகுறித்து த்ரிஷாவின் பேசினேன். ”கொஞ்சமும் உண்மையில்லாத தகவல் இது. எப்படி இப்படி ஒரு செய்தி பரவியதுன்னு எனக்கே தெரியல. அரசியலில் சேரும் எண்ணம் எதுவும் துளியும் எனக்கில்ல. எங்கிருந்து இப்படி தகவல் கிளம்பியதுன்னு கூட தெரியல.” என்கிறார் த்ரிஷா.