புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேரும் பெண்களுக்கு ஒடிசா மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுவரை 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் அக்னிபாதைத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆள் தேர்வு பணிகளை ராணுவம் தொடங்கியுள்ளது. ராணுவம்,கடற்படை, விமானப் படை எனஅனைத்திலும் அக்னிபாதை திட்டத்தின் கீழ் வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். கடற்படையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அக்னிபாதைத் திட்டத்தின் கீழ் சேர விண்ணப்பிக்குமாறு கடற்படை அறிக்கையை வெளியிட்டது. இதையடுத்து இந்தத் திட்டத்தில் சேர இதுவரை 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டபெண்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஐஎன்எஸ் சில்கா கடற்படைபயிற்சி தளத்தில் அக்னிபாதைத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னிவீர் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அக்னிவீர் வீராங்கனைகள் 600 பேருக்கு முதல்கட்டமாக இங்குபயிற்சி அளிக்கப்படும். இங்குபெண்களுக்காக தனி உணவருந்தும் அறை, பயிற்சி வளாகம், சானிட்டரி நாப்கின் இயந்திரம், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வைஸ் அட்மிரல் எம்.ஏ.ஹம்பிஹோலி தெரிவித்தார்.
தென்னக கடற்படை கமாண்ட்பிரிவின் தலைவராக எம்.ஏ.ஹம்பிஹோலி உள்ளார். இதன் தலைமையகம் கொச்சியில் அமைந்துள்ளது.
இதுகுறித்து ஹம்பிஹோலி கூறும்போது, “பெண் பயிற்சியாளர்களுக்குத் தேவையான அனைத்துவசதிகள், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு தனி தங்குமிடம் உள்ளிட்டவை ஐஎன்எஸ் சில்கா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதல்முறையாக பெண் மாலுமிகள்
30 ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படையில் பெண்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் முதல்முறையாக பெண்கள் மாலுமிகளாக தற்போதுதான் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கடற்படையில் அக்னிபாதைத் திட்டத்தின் கீழ் தற்போது 3 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் பெண்களாக இருப்பர். இவர்கள் அனைவரும் இங்குதான் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.
பெண்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளோம். 13 பெண்கள் அதிகாரிகள் அக்னிவீர் வீராங்கனைகளை வழிநடத்துவர். இங்கு பயிற்சி பெறும் வீராங்கனைகள் நாடு முழுவதிலும் உள்ள 29 கிளைகளில் பணியமர்த்தப்படுவர்” என்றார்.