அமெரிக்காவின் அதிநவீன ட்ரோன்கள் விரைவில் இந்திய முப்படைகளில் சேர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிநவீன பிரிடேட்டர் ரக ட்ரோன்கள் இந்திய முப்படைகளில் விரைவில் சேர்க்கப்பட உள்ளன. இந்த கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இந்தியா, சீனா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் நீடிக்கிறது. சீன, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ட்ரோன்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இஸ்ரேல் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட ஹெரோன் ரகத்தை சேர்ந்த ஆளில்லா விமானங்கள் சீன, பாகிஸ்தான் எல்லைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக அமெரிக்காவின் எம்.கியூ-9பி பிரிடேட்டர் ரக ட்ரோன்களை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் குளோபல் கார்பரேஷனிடம் இருந்து எம்.கியூ-9பி பிரிடேட்டர் ரகத்தை சேர்ந்த 30 ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன. இது தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி 30 ட்ரோன்களும் இந்திய முப்படைகளில் சேர்க்கப்பட உள்ளன. ராணுவம், கடற்படை,விமானப் படைக்கு தலா 10 ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் குளோபல் கார்பரேஷனின் தலைமை செயல் அதிகாரி விவேக் லால் கூறும்போது, “ட்ரோன்கள் கொள்முதல் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்” என்று தெரிவித்தார்.

மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

ரூ.22,000 கோடியில்..

ஏற்கெனவே நட்பின் அடிப்படையில் இந்திய கடற்படைக்கு 2 பிரிடேட்டர் ட்ரோன்கள் குத்தகைஅடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதால் ரூ.22,000 கோடியில் 30 ட்ரோன்கள் புதிதாக கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த ட்ரோன்கள் அமெரிக்காவின் அதிநவீன எப்35 போர் விமானங்களுக்கு நிகரானவை. தொடர்ந்து 40 மணி நேரம் வானில் பறக்கும். மணிக்கு 482 வேகத்தில் சீறிப் பாயும். கடலுக்கு அடியில் செல்லும் நீர்மூழ்கிகளை எளிதில் கண்டுபிடிக்கும்.

இந்த ட்ரோன்களில் இருந்து ஏவுகணைகளை செலுத்த முடி யும். 450 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். இவ்வாறு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.