வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது நிர்வாகத்தில் 130-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களை முக்கிய பதவிகளில் நியமனம் செய்துள்ளார்.
அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவீத அளவுக்கு இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என ஜோ பைடன் வாக்குறுதி அளித்திருந்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், 80-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களை தனது நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் நியமித்திருந்தார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, 60-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களை தனது நிர்வாகத்தில் நியமித்திருந்தார். முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், நிர்வாகத்தில் முதல் முறையாக இந்திய அமெரிக்கர்களை நியமித்தார். இவற்றையெல்லாம் தற்போதைய அதிபர் ஜோ பைடன் முறியடித்துள்ளார். தற்போது, அதிபர் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் இந்திய அமெரிக்கர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளை மாளிகையில் நடைபெறும் பல கூட்டங்களில் இந்திய அமெரிக்கர்கள் இடம் பெறுகின்றனர்.
அதிபர் ஜோ பைடன் பேசுவதை எழுதும் நபராக வினய் ரெட்டி உள்ளார். கரோனா ஆலோசகராக டாக்டர் ஆஷிஷ் ஜா உள்ளார். பருவநிலை மாற்ற ஆலோசகராக சோனியா அகர்வால் உள்ளார். குற்றவியல் நீதித்துறை சிறப்பு உதவியாளராக சிராக் பெய்ன்ஸ் உள்ளார். பணியாளர் நிர்வாக அலுவலகத்தின் தலைவராக கிரண் அகுஜா உள்ளார். மூத்த ஆலோசகராக நீரா டாண்டன் உள்ளார். மருந்து கட்டுப்பாட்டு ஆலோசகராக ராகுல் குப்தா உள்ளார்.
அமெரிக்க அரசின் துணை செய்தித் தொடர்பாளராக வேதாந்த் படேல் உள்ளார். அமெரிக்க அதிபர் மனைவி அலுவலகத்தின் டிஜிட்டல் இயக்குநராக கரிமா வர்மா உள்ளார். இந்திய அமெரிக்கர்கள் பலரை முக்கிய தூதர் அந்தஸ்திலான பதவிகளிலும் ஜோ பைடன் நியமித்துள்ளார். மேலும், கடந்த 2020-ம் ஆண்டில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தேர்ந்தெடுத்ததன் மூலம் அவர் வரலாறு படைத்தார்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, இந்தியா இல்லத்தில் கடந்த வாரம் விருந்து நிகழ்ச்சி நடத்தினார். இதில் அமெரிக்க அரசின் அனைத்து முக்கிய துறைகளில் இருந்து இந்திய அமெரிக்கர்களும் கலந்து கொண்டனர்.
இதுதவிர கூகுள் நிறுவனத்தை சுந்தர் பிச்சை வழிநடத்துகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சத்ய நாதெள்ளா வழிநடத்துகிறார். அடோப் நிறுவனத்தின் சந்தானு நராயண், ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் விவேக் லால், டெலாய்ட் நிறுவனத்தின் புனித்ரெஞ்சன், ஃபெட் எக்ஸ் நிறுவனத்தின் ராஜ் சுப்பிரமணியம் உட்பட இந்திய அமெரிக்கர்கள் பலர் அமெரிக்க நிறுவனங்களை வழி நடத்துவது குறிப்பிடத்தக்கது.