இந்தியாவில் சமூக, சகோதரத்துவத்தை அழிக்க பாஜக நினைக்கிறது…! – அசாதுதீன் ஓவைசி கண்டனம்..!

தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கியை விமர்சித்தும், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியும் பேசினார்.

இந்த வீடியோ ‘ஸ்ரீ ராம் சேனல் தெலுங்கானா’ என்ற யூ-டியூப் சேனல் ஒன்றில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எம்எல்ஏ ராஜா வை கைது செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பாஜக எம்எல்ஏ ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும், ராஜாவை கட்சியில் இருந்து பாஜக இடைநீக்கம் செய்தது. அத்துடன், இது தொடர்பாக 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் ராஜாவுக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து பாஜக எம்.எல்.ஏ. ராஜா தெரிவித்த கருத்துக்கு அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாஜக எம்எல்ஏ கூறிய கருத்துக்களை நான் கண்டிக்கிறேன். ஹைதராபாத்தில் அமைதி நிலவுவதை பாஜக விரும்பவில்லை. இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதரையும், இஸ்லாமிய மதத்தினரையும் பாஜக வெறுக்கிறது. இந்தியாவில் சமூக, சகோதரத்துவத்தை அழிக்க பாஜக நினைக்கிறது.

எங்களுடன் அரசியல் ரீதியில் மோதுங்கள். ஆனால், இவ்வாறு மோதாதீர்கள். எம்எல்ஏவின் கருத்துக்களை ஆதரிக்கவில்லை என்றால் பிரதமர் மோடியும், பாஜகவும் எதிர்வினை ஆற்ற வேண்டும். இஸ்லாமிய மத கடவுளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு ஒரே ஒரு தண்டனை தான் உள்ளது. அது, தலையை துண்டித்தல் என்ற கோஷங்களையும் நான் கண்டிக்கிறேன். அவ்வாறு கோஷம் எழுப்புபவர்களுக்கு நான் கூறுவது, சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்பது தான்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.