வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இலவசங்கள் தொடர்பாக ஆராய வல்லுநர் குழு அமைத்து பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வழக்கு இன்று (ஆக.,24) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, ‘இலவசங்கள் தொடர்பாக ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கலாம், இலவசங்கள் தொடர்பாக ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க கூடாது?’ என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா மேலும் கூறுகையில், ‘இலவசங்கள் தொடர்பாக ஒரு முடிவை எட்டப்படுவதற்கு முன் ஒரு நீண்ட ஆழமான விவாதம் தேவை. தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்துவது பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்களை போன்றவை கவனிக்கப்பட வேண்டிய அம்சம். இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர் நாளை ஆட்சிக்கு வரலாம், அப்படி வருபவர்கள் இதை நிர்வகிக்க வேண்டும்.
இலவச அறிவிப்புகளை வெளியிடுவது தனிநபர் அல்ல, அரசியல் கட்சிகள்தான். இலவச அறிவிப்புகளை அடிப்படை உரிமைகளாக கோரும் அரசியல் கட்சிகள் உள்ளன’ என்றார்.
தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற உள்ளதை அடுத்து, இந்த வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement