இலவச அறிவிப்புகள் விவகாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு ஏன் குழுவை அமைக்கக் கூடாது? – உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: “அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு ஏன் ஒரு குழுவை அமைக்க கூடாது? அல்லது மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஏன் ஒரு முடிவை எட்டக் கூடாது?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள், “தேர்தல் இலவசங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையமோ, குழுவோ அமைப்பதாக உச்ச நீதிமன்றம் முடிவு செய்தால் “நீதிபதி லோதா” தலைமையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது தலைமை நீதிபதி ரமணா, “இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் தேர்தல் இலவசம் தொடர்பாக பேசுகின்றோமே தவிர, தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவசங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து கருத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த இரு விவகாரத்தையும் நாம் கருத்தில் வேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் சிங்வி, “தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்படும் இலவசங்கள் குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதில் எந்தக் குழப்பமும் வராது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் ஒரு அரசு ஆட்சியமைத்த பின்னர் அறிவிக்கப்படும் இலவச திட்டங்கள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது என்பது சிக்கலானது, அபாயகரமானதும் கூட” என்றார்.

அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த தேர்தல் இலவசங்கள் குறித்த விவகாரத்தில் ஆய்வு செய்ய ஆணையம் அல்லது குழு அமைத்தால் அதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். எனவே, இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எட்டுவதற்கு முன்னர் ஒரு நீண்ட ஆழமான விவாதம் தேவை” என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, “இலவசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக குழு அமைப்பதற்கு ஏற்கெனவே மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, இந்த இலவசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு ஏன் ஒரு குழுவை அமைக்கக் கூடாது? அல்லது மத்திய அரசு தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ஏன் ஒரு முடிவை எட்டக் கூடாது?

இந்த ஆடம்பர இலவச அறிவிப்புகள் விவகாரம் என்பது ஒரு தீவிர பிரச்சினை. எனவே, இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு வர வேண்டும் என்பதே விருப்பம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடிவெடுக்கலாம். இதுபோன்ற இலவசம் அறிவிப்புகள் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால் இது ஒரு தீவிரமான விவகாரம். ஏனெனில், இன்று எதிர்க்கட்சியாக இருப்பவர் நாளை ஆளுங்கட்சியாக ஆட்சிக்கு வரலாம். அவ்வாறு ஆட்சிக்கு வருபவர்கள் இதை நிர்வகிக்க வேண்டும். பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்கள் போன்றவை கவனிக்கப்பட வேண்டும்” என்றார்.

அப்போது மத்திய அரசின் செலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இலவச அறிவிப்புகள் கடும் விளைவை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இலவச மின்சாரம் என்ற அறிவிப்பால் பல மின் பகிர்மான கழங்கள் இழப்பை சந்திக்கின்றன. இது ஒரு உதாரணம் மட்டுமே. மேலும், இலவச அறிவிப்பு விவகாரத்தில் சில அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை அடிப்படை உரிமை என கோருகின்றன. சில அரசியல் கட்சிகள் இலவசம் என்ற ஒரு அறிவிப்பை வைத்தே ஆட்சியை பிடிக்க முற்படுகின்றனர். அதேவேளையில் தேர்தல் இலவச அறிவிப்பு கட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்து விதத்திலும் உதவி செய்யும். அதேநேரம் இதற்காக ஒரு குழுவை அமைத்தால் அதன் அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி, இந்த தேர்தல் இலவசங்கள் குறித்து விரிவாக விசாரித்து, விவாதித்த பின்னர் தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு மாற்றி பட்டியலிட உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.