சென்னை: உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை முதல்வர் எப்போதும் போல கடந்து செல்வாரா? அல்லது கவனத்தில் கொண்டு செயல்படுவாரா என அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழக நிதி அமைச்சர் கருத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது, இது ஒரு விவாதப் பொருளாக மாறி உள்ளது. தலைமை நீதிபதி மக்கள் மீது அக்கறை கொண்டதின் காரணமாக, பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.
பிரதமர் நாட்டை வல்லரசு ஆக்க கடுமையாக உழைத்துக் கொண்டுள்ளார், இலவசம் தற்காலியாக தீர்வாகாது, மாற்றாக திறமையை வளர்க்கக்கூடிய நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதற்கு நிதி அமைச்சர் ஆங்கில தொலைக்காட்சியில் இதை தெரிவிப்பதற்கு முதலில் சட்டரீதியான அனுமதி இருக்க வேண்டும், பொருளாதாரத்தில் என்னை விட சிறந்தவரா, என்று பிரதமருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.
அறிவுரை சொல்ல அனுபவமே போதுமானது என்பதை நிதி அமைச்சருக்கு தெரியவில்லை, கருத்துக்கள் சொல்ல அனைத்து குடிமக்களுக்கு உரிமை உள்ளது, அந்த உரிமை பாரத பிரதமருக்கும் உண்டு, நீதிபதிக்கும் உண்டு.
நிதியமைச்சர் தான் பெற்ற அனுபவத்தை கார்ப்பரேட் கம்பெனி முதலாளி போல் பேசி உள்ளார், யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டுள்ளார், அவர் மட்டுமே நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவது போல் தோற்றத்தை உருவாக்கி உள்ளார், அவர் பணிபுரிந்த நிறுவனம் இவரின் தொடர்ந்த செயல்பாட்டால் என்ன பாடுபட்டது என்று அனைவருக்கும் தெரியும்.
நாங்கள் ஒரு ரூபாய் கொடுக்கிறோம், பதிலுக்கு 35 பைசாவை ஜிஎஸ்டி மூலம் திருப்பி கொடுக்கிறது, நிதி கூடுதலாக திரட்டித் தருபவர்களுக்கு தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார், கூட்டாட்சி தத்துவத்தில் இருப்பவரிடம் வாங்கி, இல்லாதவர்களுக்கு கொடுத்து அனைவரையும் அரவணைப்பு தான் கூட்டாட்சி தத்துவம், இந்த கூட்டாட்சி என்பது வலிமை மிக்கதாகும், ஒரு சாமானியர்க்கு கூட புரியும் தத்துவம் நிதி அமைச்சருக்கு புரியவில்லை.
மக்கள் கேள்விக்கு கேட்க வந்தாலும், அதை சொல்ல நிதி அமைச்சர் முன்வரவில்லை ,சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் அதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற தொணியில் நிதி அமைச்சர் பேசுகிறார், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்,
மதுரை மாவட்டத்தில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில்கொண்டு வந்த திட்டங்களை நாங்கள் பட்டியலிட்டால், எந்த கருத்து கூறாமல் அதை திசை திருப்புகிறார், ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள், தார்மீக கடமையாக பதில் சொல்ல வேண்டும், அரசு ஊழியர்கள் கூட நிதி அமைச்சர் பற்றி முதலமைச்சரிடம் புகார் கூறியுள்ளார்கள்,
யார் என்ன சொன்னாலும், ஜனநாயக மாண்புப்படி பணியாற்ற அவர் தயாராக இல்லை, நிதி அமைச்சர் மக்கள் விரோத போக்கை தன் தொகுதியில் இருந்துதொடங்கி, மாநில அரசு ,மத்திய அரசு என இன்றைக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளார்.
நிதி அமைச்சரின் அதிமேதாவித் தனமான, அறைவேக்காடு தனமான கருத்துக்களை பொறுத்துக் கொள்ள முடியாது, என்று உச்ச நீதிமன்றமே கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.இதற்கு உரிய விளக்கம் தர முதலமைச்சர் முன்வருவாரா, உச்ச நீதிமன்றம் நிதி அமைச்சரை கண்டித்ததை, எப்போதும் போல கடந்து செல்வாரா அல்லது உரிய நடவடிக்கை, அறிவுரை கொடுக்க முன்வருவாரா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
யார் கேள்வி கேட்டாலும் கோபப்படாமல், நிதி அமைச்சர் சிந்தித்து உரிய பதிலை அளித்தால் நன்றாக இருக்கும்” இவ்வாறு உதயகுமார் தெரிவித்தார்.