தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு பகுதிக்கு சென்றுள்ளார். இன்று பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 50,000க்கு மேற்ப்பட்ட மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுக ஆட்சியமைத்த ஒன்றரை ஆண்டில் செய்யப்பட்ட சாதனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுமைக்குமான பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். மாவட்டங்களுக்கு என தனியாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டோம்.
அதில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்.மற்றவை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.செய்து தரப்பட்டுள்ள திட்டங்களைப் பார்த்தீர்கள் என்றால் நமது தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம்.இதுதான் சொல்லாமல் செய்யும் பாணி ஆகும்.
எனவே தான் எதிர்க்கட்சிகளின் அவதூறுகள், பழிச்சொற்களுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு நேரமில்லை.நீங்கள் ஒவ்வொருவரும் எந்த இயக்கத்தில் இருந்து வந்துள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த இயக்கங்களையும் தலைவர்களையும் விமர்சிப்பதற்கு நான் நேரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களை விமர்சித்து உங்களிடம் கைத்தட்டல் பெற நான் விரும்பவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமாக பாராட்டுகளைப் பெறவே நான் விரும்புகிறேன்.
ஏனென்றால் இது தான் மக்களுக்கான இயக்கம்.தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்கான இயக்கம். அத்தகைய இயக்கத்துக்கு வந்திருக்கிறீர்கள்.வரவேண்டிய நேரத்தில் சரியாக வந்திருக்கிறீர்கள். நாடாளுமன்றத் தேர்தல் களமானது நெருங்கி வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் பணிகளுக்கு உங்களை நீங்கள் தயாராக்கிக் கொள்ளுங்கள்.
அதற்கு முன்னதாக கழகத்தின் கொள்கைகள் – இலட்சியங்கள் – வரலாறுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை இளைஞரணி சார்பில் மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறோம். அதில் பங்கெடுத்து – அதில் பேசப்படும் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளுங்கள். கழகத்தின் போர்முரசமாக இருக்கும் ‘முரசொலி’ நாளிதழை தவறாமல் படியுங்கள். உங்களை கருப்பு சிவப்பு மனிதராக மாற்றிக் கொள்ளுங்கள்.” என்று கூறினார்.