ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 20-ம் தேதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளை தேசிய விடுமுறை தினமாகவும் அவர்கள் கொண்டாடி வருகின்றனர். எப்பொழுதும் புனித ஸ்டீபன் தினத்தில் வாணவேடிக்கையுடன் கொண்டாட்டங்கள் களைகட்டும். அந்த வகையில் கடந்த 20-ம் தேதி புனித ஸ்டீபன் தினத்தை வாணவேடிக்கையுடன் கொண்டாட புதாபெஸ்ட்டில் உள்ள டேனுப் ஆற்றங்கரையில் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அங்குக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து அந்நிகழ்ச்சியை அந்நாட்டு அரசாங்கம் ஒத்தி வைத்ததால் அங்குள்ள மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போல் அங்கு மழை பெய்யவில்லை. இதனால் தேசிய வானிலை ஆய்வு மையத்தால் சரியான வானிலை முன்னறிவிப்புகளை வழங்க முடியவில்லை என்று ஹங்கேரி மக்களிடையே எதிர்ப்புகள் கிளம்பின. தவறான முன்னறிவிப்பை அளித்த தேசிய வானிலை ஆய்வு மையம் தங்களின் ஃபேஸ்புக் பக்கம் மூலமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை ஆய்வாளர்கள் இரண்டு பேரை அந்நாட்டு அரசு, பணி நீக்கம் செய்துள்ளது.
இதுக்கெல்லாம் பணி நீக்கமா என்று நெட்டிசன்கள் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.