ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பான ஆரம்ப உரை எதிர்வரும் 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
அடுத்தவாரத்துக்கான பாராளுமன்ற அலுவலல்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இன்றையதினம் (24) முற்பகல் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய ஓகஸ்ட் 30ஆம் திகதி பாராளுமன்றம் பி.ப 1.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பி.ப 1.00 மணி முதல் 2.00 மணிவரை கௌரவ ஜனாதிபதியினால் ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு முன்வைக்கப்படும். அதன் பின்னர் பாராளுமன்றம் மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் 1 ஆகிய தினங்களில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் மதியபோசன இடைவேளை இன்றி நடத்தப்படவுள்ளது.
அத்துடன், செப்டெம்பர் 02ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணிவரை ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவிருப்பதுடன், இதன் பின்னர் குழு நிலை மற்றும் மூன்றாவது வாசிப்பு இடம்பெற்று சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது.
அத்துடன், அன்றையதினம் வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள், விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீடுச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் என்பனவும் பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 29ஆம் திகதி (திங்கட்கிழமை) எதிர்க்கட்சி கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை “மின்சாரப் பட்டியல் பாரியளவில் அதிகரிக்கப்பட்டமையினால் பொதுமக்கள் எதிர்கொள்ள நேரிட்டுள்ள சிரமங்கள்” குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.
அதேநேரம், மத்திய வங்கியின் ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க அவர்களின் தலைமையில் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் விசேட நிகழ்ச்சி எதிர்வரும் 30ஆம் திகதி பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை இடம்பெறவிருப்பதாக சபைமுதல்வர் அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த இங்கு தெரிவித்தார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நிலையியற் கட்டளைகளில் திருத்தம் செய்து துறைசார் மேற்பார்வைக் குழுக்களை உடனடியாக நியமிக்கவுள்ளதாகவும் சபை முதல்வர் இங்கு தெரிவித்தார். ஜனாதிபதியின் யோசனைக்கு அமைய பாராளுமன்ற குழு முறையை பலப்படுத்தி மேலும் மூன்று நிலையியற் குழுக்கள் ஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற விவாதங்களில் நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.