தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நடிகை த்ரிஷா இன்றுவரை தனது நட்சத்திர அந்தஸ்தை விடாமல் வைத்திருக்கிறார். விஜய், அஜித், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா என தமிழின் உச்ச நட்சத்திரங்களோடு ஜோடி போட்டு நடித்த இவருக்கு தமிழ் திரையுலகில் ஏரளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிகை த்ரிஷா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களையே அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், கிட்டத்தட்ட இருபது வருடங்களாக எவ்வித தளர்வுமின்றி திரையுலகில் கோலூன்றி ஆட்சி செய்து வருகிறார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன்‘ படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இவரை குந்தவை கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்கள் இவரின் இளமையான தோற்றத்தை கண்டு வியந்து வருகின்றனர்.
த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் போன்ற பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் செப்டெம்பர்-30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை காணும் ஆர்வத்தில் த்ரிஷாவின் ரசிகர்கள் இருக்கையில், த்ரிஷாவின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வந்தது. இந்த செய்தி பல நெட்டிசன்களுக்கு தீனி போடும் விதமாக அமைந்திருந்தது. இணையத்தில் வெளியான செய்திகளின்படி, த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார், விரைவில் அவர் அரசியல்வாதியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கப்போகிறார் என்றும் தளபதி விஜய், த்ரிஷாவிற்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவர் த்ரிஷாவை அரசியலில் நுழைய உற்சாகப்படுத்தி இருப்பதாகவும் வதந்திகள் வெளியானது.
இவ்வாறு தொடர்ந்து த்ரிஷா பற்றி எழுந்த வதந்திகளுக்கு த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் விளக்கமளித்து இருக்கிறார். அவர் கூறுகையில், தனது மகள் த்ரிஷா தற்போது நடிப்பதில் மிகவும் பிசியாக இருப்பதாகவும், அவர் அடுக்கடுக்காக பல இந்திய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் நடிகை த்ரிஷா நடிப்பை தவிர்ப்பது அரசியலில் இறங்கமாட்டார் என்பதை அவரது தாயார் உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் சில தகவல்களின்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகப்போகும் ‘தளபதி 67’ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போது படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த வருடத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.