சென்னை: பில்கிஸ் பானு மட்டும்மல்ல எந்தவொரு பெண்ணுக்கும் அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஆதரவு தேவை என குஷ்பு தெரிவித்துள்ளார்.
2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்றவர்களை அண்மையில் குஜராத் அரசு விடுதலை செய்தது.
குஜராத் அரசின் இந்த முடிவு நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு பெண்கள் நல அமைப்புகளும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், “ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு , பெண்ணின் ஆன்மாவை சிதைத்த எந்த நபரும் விடுதலையாகக் கூடாது. அப்படிச் செய்தால் அது மனித குலத்திற்கும், பெண்களுக்கும் நேரிட்ட அவமானம். பில்கிஸ் பானு மட்டும்மல்ல எந்தவொரு பெண்ணுக்கும் அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஆதரவு தேவை.” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.