குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்..!

டெல்லி: குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் அதிக அளவில் பரவுவதால் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா, குரங்கம்மை உட்பட உலகளவில் உருவாகும் அனைத்து நோய்களும் முதலில் கண்டறியப்படும் மாநிலமாக கேரளா இருக்கிறது. கொரோனாவால் இந்த மாநிலம் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ‘தக்காளி காய்ச்சல்’என்ற புதிய நோய், சிறுவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. கடந்த மே மாதம் 5ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லத்தில் இந்த நோய் முதன் முதலில் கணடறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒடிசாவிலும் இதர மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு வருகிறது.

இதையடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அண்மையில் கடிதம் எழுதியுள்ளது. அதில்; நாடு முழுதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவுகிறது. கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை இதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கு இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

தக்காளி காய்ச்சல் நோய் பரவும் தன்மை கொண்டது என்பதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் உள்ள குழந்தைகளை தொடக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல் அல்லது சொறி அறிகுறிகள் ஏற்பட்டவர்களை 7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி தண்ணீர், பால், பழச்சாறு ஆகியவற்றையும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீர் உணவையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.