புதுடெல்லி: கொலம்பியாவில் வாரத்துக்கு 3 கோடி கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், சில நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலம்பியாவில் உள்ள மெடலினில்தான் இந்த கொசுக்கள் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இதில், விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து, வாரத்துக்கு 3 கோடி கொசுக்களை உற்பத்தி செய்கின்றனர். இந்த கொசுக்கள், ‘ஓல்பாசியா’ என்ற பாக்டீரியாவை கொண்டுள்ளன. காடுகளில் விடப்படும் இவை, மற்ற கொசுக்களுடன் இணைந்து, ‘ஓல்பாசியா’ பாக்டீரியாவை பரப்புகின்றன. இதன் மூலமாக, டெங்கு, ஜிகா வைரஸ், சிக்குன்குனியா உள்ளிட்ட ேநாய்களை பரப்பும் ெகாசுக்களின் வீரியம் குறைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மனித உயிரிழப்புக்கள் தடுக்கப்படுகின்றன. 2015ம் ஆண்டு ஓல்பாசிய கொசுக்களை உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, டெங்கு பாதிப்பு 89 சதவீதம் குறைந்துள்ளதாக மெடலினில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பில்கேட்சின் தகவலின்படி, இந்த கொசுக்கள் உற்பத்தி திட்டம் பிரேசில், இந்தோனேஷியா, மெக்சிகோ, வியட்நாட், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. பில்கேட்ஸ் தனது பதிவில், ‘இந்த அற்புதமான கொசுக்கள் பறந்து, உயிர்களை காப்பாற்றுகின்றன,’ என கூறியுள்ளார்.