பொதுவாக தெரு நாய்கள் என்றாலே கவனிப்பாரற்று, கேட்பாரற்று இருக்கும் என்றுதான் நாம் பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
ஆனால் குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்து தெரு நாய்கள் ஒவ்வொன்றும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அந்த நாய்களின் பெயரில் கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குஜராத்தின் ஒரு கிராமத்து மக்கள் தெரு நாய்களை தங்கள் முன்னோர்கள் போல் பாவித்து பராமரித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமத்தின் எதிர்காலம் குறித்து எச்சரிக்கை.. சரசரவென 2வது நாளாக சரிந்த பங்குகள்!
குஜராத்
குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டம், பலன்பூர் தாலுகாவில் உள்ள குஷ்கல் என்ற கிராமத்தில் வசிக்கும் தெரு நாய்கள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கிராமத்தில் உள்ள தெருநாய்கள் உண்மையில் கோடீஸ்வர வாழ்க்கையை நடத்தி வருகின்றன.
தெரு நாய்கள்
இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தெரு நாய்கள் மீது அன்பாக குறிப்பாக தங்கள் மூதாதையர் போல அதனை வழி நடத்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கும் அந்த பகுதி மக்கள் தினமும் உணவு அளித்து பராமரித்து வருவதாகவும் அது மட்டுமின்றி லட்டு போன்ற இனிப்புகளையும் விசேஷ நாட்களில் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
20 ஏக்கர் நிலம்
இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சுமார் 20 ஏக்கர் நிலத்தை தெரு நாய்களுக்காக ஒதுக்கி உள்ளதாகவும் அந்த நிலம் தற்போதைய சந்தை மதிப்பின்படி 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பகுதியை சேர்ந்த சவுதாரி சமூகத்தை சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள நாய்களை தங்கள் முன்னோர்கள் போல் பராமரிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் ஒன்று உண்டு என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
நவாப் ஆட்சி
சுதந்திரத்திற்கு முன் இந்த பகுதி நவாப் ஆட்சியின் கீழ் இருந்தது என்றும் அந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு சில ஏக்கர் நிலங்களை இலவசமாக கொடுத்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அந்த கிராமவாசிகள் தங்களுக்கு கிடைத்த நிலங்களின் ஒரு பகுதியை தெருநாய்களுக்கு ஒதுக்குவது என்று முடிவு செய்து உள்ளனர். மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம், ஆனால் தெருநாய்கள் எப்படி வாழும் என்று யோசித்து அந்த பகுதி மக்கள் 20 ஏக்கர் நிலத்தை தெருநாய்களுக்காக ஒதுக்கி அந்த நிலத்தில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் தெருநாய்களின் நலனுக்காக செலவிட்டு வருகின்றனர். இந்த கிராம மக்கள் ஜாதி மத வேறுபாடுள் இன்றி அன்றிலிருந்து இன்றுவரை இந்த மரபை கடைபிடித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
சிறப்பு பாத்திரங்கள்
தெரு நாய்க்கு உணவு அளிப்பதற்காகவே உயரமான ஒரு பெரிய பகுதியை கட்டி இருப்பதாகவும் நாய்களுக்கு உணவு கொடுப்பதற்காக சிறப்பு பாத்திரங்களையும் வாங்கி இருப்பதாகவும் அந்த பகுதியில் உள்ள ஹிதேஷ் என்பவர் கூறியுள்ளார்.
நாய்களுடன் நட்பு
எல்லா தெருநாய்களுக்கும் தினமும் போதுமான ஆரோக்கியத்துடன் கூடிய உணவு கிடைப்பதை கிராமவாசிகள் ஒவ்வொருவரும் தினமும் உறுதி செய்கிறார்கள் என்றும் ஹிதேஷ் மேலும் கூறியுள்ளார். மேலும் இந்த உலகிற்கு மனிதர்கள் மற்றும் விலங்குகள் நட்பாக இருப்பதை காட்டுவதே எங்களது இந்த முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் இந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் கொடுத்து வைத்தவை என இந்த செய்தியை படிக்கும் பலர் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Stray Dogs In This Gujarat Village Are ‘Crorepatis’, Own Land Worth Rs.5 Crore
Stray Dogs In This Gujarat Village Are ‘Crorepatis’, Own Land Worth Rs.5 Crore | கோடிக்கணக்கில் சொத்து, சொகுசான வாழ்க்கை… குஜராத் தெருநாய்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!