கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இன்று நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.272 கோடியில் 229 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து ரூ.663 கோடியில் 748 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இன்று நடந்த அரசு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கார் மூலம் கோவையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். இன்று காலை 10 மணிக்கு ஈச்சனாரியில் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.588 கோடியி்ல் 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவுத்துறை, கோவை மாநகராட்சி, பள்ளி கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழில் வணிக துறை (மாவட்ட தொழில் மையம்), தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இதைதொடர்ந்து, பொதுப்பணித்துறை, கோவை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, நீர்வள துறை, உயர்கல்வி துறை, பொதுப்பணித்துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு), நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை, கூட்டுறவு துறை ஆகிய துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்ட ரூ.272 கோடியில் 229 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோவை மாநகராட்சி, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, பேரூராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிகளின் நிர்வாகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (தாட்கோ- பொறியியல் துறை), பொதுப்பணி துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு), பொதுப்பணி துறை (மருத்துவ பணிகள்) கூட்டுறவு துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.663 கோடியில் 748 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ், சாமிநாதன், முத்துச்சாமி, ராமசந்திரன், கலெக்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இன்று மாலை 5 மணிக்கு ஆச்சிப்பட்டியில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலந்துகொண்டு பேசுகிறார். அதே மேடையில் மாற்றுக்கட்சியினர் 50 ஆயிரம் பேர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். இதன்பின்னர் திருப்பூர் செல்லும் முதல்வர், இரவில் அங்கு தங்குகிறார். 25ம் தேதி (வியாழன்) காலை 10 மணிக்கு திருப்பூர் பப்பீஸ்வேலி ஓட்டலில் தொழில்முனைவோருடன் கலந்துரையாடுகிறார். மதியம் ஈரோடு செல்கிறார். மாலை 6 மணிக்கு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கள்ளிப்பட்டியில் கலைஞர் முழு உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.
இரவில், ஈரோட்டில் தங்குகிறார். 26ம்தேதி (வெள்ளி) காலை 9 மணிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பங்கேற்கிறார். காலை 9.30 மணிக்கு பெருந்துறை அருகே கிரே நகரில் நடந்துவரும் அவினாசி-அத்திக்கடவு திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். காலை 10 மணிக்கு பெருந்துறை சரளை என்னும் இடத்தில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, 63 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அன்று மதியம் கோவை திரும்புகிறார். ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலை 6 மணிக்கு நீலாம்பூர் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்விநிறுவனத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் நிறுவனர் நாள் விழாவில் பங்கேற்கிறார். இரவு 8 மணியளவில் பீளமேடு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.