ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோவிலுக்கு ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு மலையேறிச் செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு 24 முதல் வரும் 27 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரை மட்டுமே மலை ஏறி கோவிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. அனுமதி நாட்களில் மழை பெய்தால் மலையேறிச் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பக்தர்கள் அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM