சுங்கச் சாவடிக்கு மாற்று | வாகன நம்பர் ப்ளேட்களை கண்காணித்து கட்டணம் வசூலிக்க கேமரா: நிதின் கட்கரி

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகளை செய்வது தொடர்பான யோசனைகளை முன்வைத்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

டெல்லியில் நடைபெற்ற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உச்சிமாநாட்டில் மத்திய அமைச்சர் கட்கரி இந்த யோசனைகளை முன்வைத்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரீடர் கேமராக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏஎன்பிஆர் மூலம் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணமும் நேரடியாக வாகன ஓட்டிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்தே எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதனை விரைவில் பைலட் திட்டமாக செயல்படுத்தத் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது:

கடந்த 2019 ஆம் ஆண்டு, அனைத்து கார்களுக்கும் தொழிற்சாலைகளிலேயே நம்பர் ப்ளேட் பொருத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு, கட்டண வசூல் நடவடிக்கையை திட்டமிட்டு வருகிறோம். ஆனால் இதில் ஒரே ஒரு சிக்கல் தான் இருக்கிறது. சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் செல்லும் வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்க வழியில்லை. அதற்கான வழியையும் சட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். நம்பர் ப்ளேட் மூலமாகவே சுங்கக் கட்டணம் வசூலாகும் வகையில் பிரத்யேக நம்ப ப்ளேட்களை பொருத்த எல்லா வாகன ஓட்டிகளும் அறிவுறுத்தப்படுவார்கள். இதற்கு நாடாளுமன்றத்தில் சட்டமசோதா கொண்டுவர வேண்டும்.
இப்போதைய நிலவரப்படி சுங்கக் கட்டணத்தில் 97% அதாவது ரூ.40,000 கோடி ஃபாஸ்டேக் மூலம் வசூலாகிறது. எஞ்சிய 3% பேர் மட்டுமே நேரடியாக கட்டணம் செலுத்துகின்றனர். ஃபாஸ்டேக் இருப்பதால் வாகனங்கள் சுங்கச் சாவடியில் 47 விநாடிகள் மட்டுமே காத்திருந்தால் போதுமானது. 1 மணி நேரத்தில் 260 வாகனங்கள் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு கடக்கின்றன.

இவ்வாறு கட்கரி தெரிவித்தார்.

ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரீடர் கேமரா: சுங்கச் சாவடிகளுக்கு மாற்றாக ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரீடர் கேமரா அமைக்கும்போது சுங்கச்சாவடிகளில் நெரிசல் மேலும் வெகுவாகக் குறையும். ஆனால் இதில் இருக்கும் நடைமுறை சிக்கல் குறித்து தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் கூறுகையில், “இந்தத் திட்டத்தில் தவறில்லாமல் எவ்விதமான தகவல் கசிவும் இல்லாமல் நடைமுறைப்படுத்த பல்வேறு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படு. ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரீடர் கேமரா (ANPR) வகை கேமராக்கள் நம்பர் ப்ளேட்டில் உள்ள 9 எண்களை மட்டுமே கணித்து கட்டணம் நிர்ணயிக்கும் என்பதால் நம்பர் ப்ளேட்டில் வேறேதும் அநாவசிய எழுத்தோ வார்த்தையோ இருந்தால் அதை ஏஎன்பிஆர் கேமரா ரீட் செய்யாது. இந்ந்தியாவில் நம்பர் ப்ளேட்டில் கண்டதையும் எழுதும் பழக்கம் பரவலாக இருக்கிறது. இது பெரிய சவாலாக இருக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.