பாஜக தலைவர், டிக்டாக் நட்சத்திரம், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர், நடிகையுமான சோனாலி போகத்’ தனது 42வது வயதில் கோவாவில் மாரடைப்பால் காலமானார்.
போகத் தனது ஊழியர்கள் சிலருடன் கோவாவிற்கு சென்றிருந்தார். அங்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து போகத், அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
சமீபத்தில், நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்பிருந்ததை விட இப்போது இளம் வயதினருக்கு மாரடைப்பு அதிகமாகி வருவதை இந்த சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“கடந்த இரண்டு வருடங்களில், 18 மற்றும் 20 வயதினரிடையே மாரடைப்பு ஏற்படுவம் நிகழ்வுகள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம்,” என்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள சாரதா மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர் சுபேந்து மொஹந்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் அதிகமாக மாரடைப்புக்கு ஆளாகுவதற்கு என்ன காரணம்?
இந்தியன் ஹார்ட் அசோசியேஷன் கருத்துப்படி, இந்தியர்கள்/தெற்காசியர்கள் மத்தியில் இதய நோய் விகிதம், மேற்கத்திய உலகின் தேசிய சராசரியை விட இரு மடங்கு அதிகமாக இருப்பதாக மக்கள்தொகை தரவுகள் குறிப்பிடுகின்றன. உலக மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், உலகில் மொத்த இதய நோய் பாதிப்புகளில் சுமார் 60 சதவீதம் இந்தியாவில் உள்ளதாக பொது சுகாதார மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இதய நோய் முந்தைய வயதிலேயே (கிட்டத்தட்ட 33 சதவிகிதம் முன்னதாக) இந்தியர்களைத் தாக்குகிறது, பெரும்பாலும் முன் எச்சரிக்கை இல்லாமல்,” என்று அது குறிப்பிட்டது.
மேலும், தி குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வில் இந்தியாவில் இருதய நோய் இறப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு 272 ஆக உள்ளது, இது உலக சராசரியான 235ஐ விட மிக அதிகம்.
ஃபரிதாபாத்தில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் இருதயவியல் மருத்துவர் சஞ்சய் குமார், கவலையளிக்கும் வகையில், மற்ற இனக்குழுக்களை விட இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினார்.
இதய நோய் நிகழ்வு’ அமெரிக்கர்களை விட 3.4 மடங்கு அதிகம் மற்றும் ஜப்பானியர்களை விட 20 மடங்கு அதிகம். மற்ற சமூகங்களை விட இந்தியர்களுக்கு 5-10 ஆண்டுகளுக்கு முன்பே கரோனரி தமனி நோய் ஏற்படுகிறது. இந்தியர்களுக்கு இரண்டாவது மாரடைப்பு விகிதம் மூன்று மடங்கு அதிகமாகவும், வெள்ளையர்களை விட இரண்டு மடங்கு இறப்பு விகிதமும் அதிகம்,” என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
இதை தெளிவுபடுத்தும் வகையில், மருத்துவர் மொஹந்தி “ஆம், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார். இருப்பினும், இதற்குப் பின்னால் உள்ள சரியான காரணம் எங்களுக்குத் தெரியாது. இந்தியர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தரவு வாரியாக தீர்மானிக்கப்படுகிறது. இந்தியர்கள் எப்போதும் குறைந்த கலோரி உணவைக் கொண்டுள்ளனர், இது மேற்கத்திய உணவில் இருந்து மிகவும் வேறுபட்டது. இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். சமீபகாலமாக, மேற்கத்திய நாடுகள் உட்கொள்ளும் அதே வகையான உணவு வகைகளை நாம் அனைவரும் உண்கிறோம்.
இந்த உணவில் நிறைவுற்ற கொழுப்புகள், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை உள்ளன என்று அவர் விளக்கினார்.
இதை ஒப்புக்கொண்ட அகமதாபாத் ஷால்பி மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் ஜீஷன் மன்சூரி, தெற்காசிய மக்களில் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவதற்கு அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை தேர்வுகள் காரணமாக இருக்கலாம் என்றார்.
நவீன இந்திய வாழ்க்கை முறை, ஜங்க் ஃபுட்களின் அதிகரித்த நுகர்வு மற்றும் பல பாரம்பரிய இந்திய சமையல் குறிப்புகளில் அதிக அளவு மசாலா மற்றும் எண்ணெயைக் கொண்டிருப்பது யாருடைய ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. அவர்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகளுடன் போராடுகிறார்கள், இவை இரண்டும் இருதய பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றன, ”என்று அவர் மேலும் கூறினார்.
நமது உடல்கள் மரபியல் ரீதியாகப் பழகாத மேற்கத்திய உணவு முறைகளை உண்பதால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். ஆனால், இது ஒரு அனுமானம்தான் என்று மொஹந்தி கூறினார்.
இந்தியர்களில், மேற்கத்திய மக்களை விட குறைந்தது ஒரு தசாப்தத்திற்கு முன்பே இதய நோய் ஏற்படுகிறது என்று குர்கான் பாராஸ் மருத்துவமனையின் மருத்துவர் அமித் பூஷன் ஷர்மா எடுத்துரைத்தார். இதற்கு மரபணு முன்கணிப்பு (genetic predisposition) ஒரு காரணம். இதனால், லிப்போபுரோட்டீன் உருவாகும் போக்கு அதிகரித்துள்ளது – இது இரத்த நாளங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றும் இறுக்கமான அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பின் மிகவும் ஆபத்தான வடிவம்.
இந்தியர்களுக்கு இதயத்துடிப்பு அதிகமாக இருப்பதும் மற்றொரு காரணம் என்றார். ஏனென்றால் இந்தியர்கள் இயல்பிலேயே பல வேலை செய்பவர்கள், நாம் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய முயற்சிக்கிறோம்.
இந்தியர்களிடையே, அதிகரித்த மன அழுத்தம், உட்கார்ந்த வாழ்க்கை முறை, மாசுபாடு, புகைபிடித்தல், சரியான தூக்கமின்மை மற்றும் மோசமான ஊட்டச்சத்து தேர்வுகள் ஆகியவை வேறு சில காரணங்கள் என மருத்துவர் சர்மா பகிர்ந்து கொண்டார்.
உலகின் நீரிழிவு தலைநகராகவும் இந்தியா உள்ளது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், வலியைச் சுமக்கும் நரம்புகள் மழுங்கடிக்கப்படுகின்றன, மேலும் உங்களால் இதய நோயைக் கண்டறிய முடியாது.
இதை ஒப்புக்கொண்ட ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவர் ஆஷிஷ் அகர்வால், கரோனரி இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் இந்தியர்களிடையே ஒப்பீட்டளவில் பொதுவானவை என்று கூறினார்.
கூடுதலாக, அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய மக்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், தெற்காசியர்கள் மற்ற குழுக்களை விட குறைந்த உடல் எடையில் உயர் இரத்த அழுத்தம், உயர் ட்ரைகிளிசரைடுகள், அசாதாரண கொழுப்பு மற்றும் வகை 2 நீரிழிவு ஆகியவற்றை உருவாக்க முனைகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
எப்போது சோதனை செய்ய வேண்டும்?
இது ஆபத்து காரணிகளைப் பொறுத்தது. பிரச்சனை என்னவென்றால், யாருக்கு ஸ்கிரீனிங் தேவை, யாருக்கு தேவையில்லை என்பதை நாங்கள் அடையாளம் காணவில்லை. எனினும் ஆபத்து காரணிகள் உள்ளவர்கள் பரிசோதிக்கப்பட வேண்டும், அதாவது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, புகைபிடித்தல் மற்றும் புகையிலை நுகர்வு ஆகியவற்றின் வரலாற்றைக் கொண்டவர்களைக் குறிக்கிறோம். அதிக மன அழுத்தம் உள்ள வாழ்க்கையை நடத்துபவர்கள் அல்லது குடும்பத்தில் மாரடைப்பு வருபவர்களும் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அறிவியல் ரீதியாக, ஒருவர் 40 வயதில் ஸ்கிரீனிங்கைத் தொடங்க வேண்டும்.
இருப்பினும், இந்த ஆபத்து காரணிகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், அவற்றைப் பற்றி நீங்கள் அறிந்தவுடன் உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்வது நல்லது.
மருத்துவர் மன்சூரியின் கூற்றுப்படி, ” 20 வயதை அடைந்தவர், ஸ்கிரீனிங் பெற தகுதியுடையவர்கள், அவர்கள் 2-4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதனைகள் செய்ய வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் ஆண்டுதோறும் தடுப்பு சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வது உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
மாரடைப்பைத் தடுக்கும் வாழ்க்கை முறைகள்
வாரத்தில் 5 நாட்கள், குறைந்தது 30-40 நிமிடங்கள், சில உடல் செயல்பாடுகளை உறுதி செய்யவும்.
நீங்கள் தொடர்ந்து மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தரமான நேரத்தை செலவிடுங்கள்.
போதுமான வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்கவும்.
புகைபிடிப்பதை முற்றிலும் தவிர்க்கவும்.
முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
பொதுவாக துரித உணவுகளில் காணப்படும் கூடுதல் உப்பை உட்கொள்ள வேண்டாம்.
தினமும் குறைந்தது 250 கிராம் பழங்கள்/காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக எடை போன்றவை ஆபத்துக் காரணிகளில் சில. நீங்கள் என்ன, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை மாற்றுவதன் மூலம் அதை மாற்றலாம் என்று மருத்துவர் மன்சூரி முடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“