ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டில் இருந்து 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், சுரங்க ஒதுக்கீடு பெற்றார். முதல்வர் எனும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சுரங்க உரிமம் பெற்றார் ஹேமந்த் சோரன் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. இது உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திலும் பாஜக புகார் செய்துள்ளது.
அதேநேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கூட்டணி அரசை கவிழ்ப்பதிலும் பாஜக தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது ஆளும் ஜே.எம்.எம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேரை பாஜக வளைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் சட்டசபையில் ஜேஎம்எம் 30; காங்கிரஸ் 18; ஆர்ஜேடி, இடதுசாரிகள் 2 ; பாஜக கூட்டணிக்கு 31 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்களை வளைப்பதில் பாஜக தீவிரம் காட்டுகிறது.
இப்பின்னணியில் சுரங்க முறைகேடு விவகாரத்தி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜார்க்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இதில் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ்ம் வீடும் அடங்கும்.
பிரேம் பிரகாஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அலமாரி ஒன்றில் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் இருந்தது கண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த 2 துப்பாக்கிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இது தொடர்பாக தனியாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் சுரங்க முறைகேடு விவகாரத்தில் ஹேமந்த் சோரன் மீதான பிடி இறுகத் தொடங்கிவிட்டது. இது ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவிக்கு வேட்டு வைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.