ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் விநாயகன்
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தததாக ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு ஆக., 22ம் தேதி முதல் சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிட்டாலும், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட சிலர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் இந்தப்படத்தில் மலையாள நடிகர் விநாயகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஷால் நடித்த திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் மலையாள நடிகர் விநாயகன். அதன்பிறகு மரியான் உள்ளிட்ட ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்தார். அதேசமயம் மலையாளத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் விநாயகன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கம்மட்டிப்பாடம் என்கிற படத்தில் நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார் விநாயகன்.
இதற்கு முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம், ஷைன் டாம் சாக்கோ என்கிற மலையாள வில்லன் நடிகரை தமிழுக்கு அழைத்து வந்தார் நெல்சன். மலையாளத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் அவரை அந்தப்படத்தில் டம்மியான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் நெல்சன். படத்தில் தன்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என படம் வெளியான பிறகு கடுமையாக ஷைன் டாம் சாக்கோவும் விமர்சனம் செய்திருந்தார்.. அந்தவகையில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் விநாயகனை ஜெயிலர் படத்தில் நெல்சன் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என நம்புவோம்..