வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும் அதை தினமும் வழிபட அனுமதி கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, வாரணாசி நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் நேற்றுடன் நிறைவடைந்தன. மஸ்ஜித் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து. எனவே இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை. மசூதி தொடர்பான விவகாரத்தை வக்பு வாரியம் மட்டுமே விசாரிக்க உரிமை உண்டு’’ என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது’’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், தீர்ப்பை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.