தண்ணீரே இல்லாத இடத்தில் கூட வளரும்; பனைமரங்களை பாதுகாப்பது அவசியம் – யோகா விஜயகுமார்

க.சண்முகவடிவேல்

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ஆற்றங்கரையோரம் ஆயிரம் பனை விதை விதைப்பு பணிகள் திருச்சியில் நடைபெற்றது.  மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.கே.ராஜா, கன்மலை டிரஸ்ட் வில்பர்ட் எடிசன், அக்னி சிறகுகள் மகேந்திரன், சுகு, நிரோஷ், ஆரிப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த பனை விதை விதைப்பு பணியில் ஈடுபட்டனர்.

பனை விதை விதைப்பு நிகழ்வு குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பெ.விஜயகுமார் பேசுகையில்,

தமிழர்களின் மரம் என கொண்டாடப்படும் பனை மரத்தை பாதுகாக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் ஆயிரம் பனை விதை விதைப்பு பணியினை உய்யங்கொண்டான் குழுமாயி அம்மன் திருக்கோவிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் ஆற்றங்கரையோரத்தில் விதைத்துள்ளோம். பனை மரத்துக்கும் தமிழர்களுக்குமான தொடர்பு ஆதிகாலத்திலிருந்தே இருக்கிறது.

பண்டைய இலங்கியங்கள் யாவும் பனை ஓலையில் எழுதப்பட்டவைதான். காகிதங்கள் கண்டுபிடிக்கும் முன்பு வரை பனை ஓலைகளில் எழுதப்பட்ட இலங்கியங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நகர்த்தப்பட்டன. பனைமரத்தில் ஆண் பனை, பெண் பனை, கூந்தப் பனை, தாளிப் பனை, குழுதிப் பனை, சாற்றுப் பனை, ஈச்சம் பனை, ஈழப் பனை, சீமைப் பனை, ஆதம் பனை, திப்பிலிப் பனை, இடுக்குப் பனை என 34 வகைகள் உள்ளன.

தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஏறத்தாழ 8 கோடி பனைமரங்கள் இருந்தன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததாலும், செங்கல் சூளைக்கும், விறகு, வீட்டு உபயோகத்திற்காகவும் பனைமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதாலும், பனைமரங்களை பராமரிக்க தேவையான ஊழியர்கள் கிடைக்காததாலும் பல மரங்கள் பட்டுபோக தொடங்கி விட்டன.

ஒரு காலத்தில் பனைமரங்கள் அதிகமாக இருந்தன. தற்போது  பனையை பாதுகாக்க வேண்டியும் பனை தொழில் மேம்பட பலதிட்டங்களை கொண்டு வர வேண்டுய அவசியத்தில் ஆட்சியாளர்களும் சமூக ஆர்வலர்களும் இருக்கின்றோம். இதற்காக நீர்பிடிப்பு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்று ஓரங்களிலும், குளங்களின் கரையிலும், வாய்க்கால் கரையிலும் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க பனை மரவிதைகளை விதைத்து வருகிறோம்.

இன்றைய இளைய தலைமுறையினர் பனையின் பயன்கள் மற்றும் பனை பொருள்களில் உள்ள சத்துக்கள் குறித்தும், மருத்துவகுணம் பற்றியும் அறியாமல் உள்ளனர். அவர்களிடம் பனை பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். ஒரு பனை மரம் ஆண்டுக்கு 150 லிட்டர் பதநீர், ஒரு கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை தருகிறது.

ஒரு பனை மரத்தில் இருந்து 24 கிலோ பனைவெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவை கிடைக்கின்றன. இயற்கை நமக்குத் தந்த பெரும் கொடைகளில் ஒன்று பனைமரம். தண்ணீரே இல்லாத இடத்தில் கூட வளரும் அந்த மரம் மனிதர்களுக்கு சலிப்பின்றி பலன் தரக்கூடியது. எனவே, நாம் அனைவரும் பனை மரம் வளர்க்கும் பணியில் முடிந்தவரை நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்.

வருங்காலங்களில் தன்னார்வலர்களை கொண்டு பனை விதைகளை சேகரிப்பதும், பனைவிதைகளை விதைப்பதும் தொடர் திட்டமாகவே கொண்டு செயல்படுத்தவிருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.   அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் ஆகியோர் இந்த பனை விதை விதைப்பிற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.