டெல்லி: சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி யுவ புராஸ்கார் விருது என்பது இலக்கியத்திற்கு சேவை புரியும் இளையோருக்கு வழங்கப்படும் விருதாகும். ஒன்றிய அரசால் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த 1957ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாகித்ய அகாடமி என்னும் ஒரு அமைப்பு, ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. இந்த சாகித்ய அகாடமியானது, இந்திய மொழிகளில் உள்ள இலக்கியம், இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டு, அதன்படி செயல்பட்டு வருகிறது.
இந்த சாகித்ய அகாடமி தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் இன்னும் பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளும் நடத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன், இந்திய மொழியில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுவதுடன், சிறந்த படைப்புகளுக்கும் ஆண்டுதோறும் விருதினை அளித்து, சிறந்த படைப்பாளர்களை இன்னும் ஊக்கப்படுத்தியும் வருகிறது. அந்தவகையில்,
எழுத்தாளர் காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருது:
சாகித்ய அகாடமியினால் வழங்கப்படும் இளம் தமிழ் எழுத்தாளர்களுக்கான யுவ புராஸ்கர் விருது எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 22 பிராந்திய மொழி படைப்புகளுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதை தமிழ் எழுத்தாளர் காளிமுத்து பெறுகிறார். ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதை தொகுப்புக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு பால சாகித்ய விருது:
சாகித்ய அகாடமி வழங்கும் சிறுகதைகளுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருத்தாளர்களுக்கு ரூ.50,000 ரொக்கத்துடன் விருது வழங்கப்படுகிறது.