திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன். மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள், திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்தார்.
இன்று முதல் 3 நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ், சு.முத்துசாமி, உயரதிகாரிகள் வரவேற்றனர்.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (24-ம் தேதி) காலை 10.30 மணிக்கு ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா தொடங்குவதற்கு முன்னதாக அண்ணாமலை இந்த ட்வீட்டைப் பகிர்ந்தார்.