திருநங்கைகளுக்கு சுகாதார திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கையெழுத்தானது; திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்ய எதிர்காலத்தில் இரண்டு மருத்துவமனைகளில் புதிய வசதிகள் உருவாக்கப்படும் என மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஒருங்கிணைந்த சுகாதாரத்திட்டத்தை வழங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், தேசிய சுகாதார ஆணையமும் இன்று கையெழுத்திட்டன. புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் நாளந்தா கலையரங்கில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் கலந்துகொண்ட மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பேசுவையில், திருநங்கைகளும் தங்களது வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பது அரசு மற்றும் சமூகம் ஆகிய இரண்டின் பொறுப்பு. பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் சீர்திருத்தங்களால் நாடு மாறி வருகிறது, நாடு முன்னேறி வருகிறது.
திருநங்கைகள் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழ வேண்டும். இது மட்டுமின்றி சிறப்பு சுகாதார வசதிகளை இலவசமாக பெற இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு மிகப்பெரிய படியாகும். எய்ம்ஸ் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற இன்னும் 2 மருத்துவமனைகளில் இந்த வசதிகளை பெற அமைச்சகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் பயன்பெற இந்திய அரசு வழங்கியுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கான சான்றிதழ் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான தேசிய தளத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். மேலும், மத்திய / மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள இதுபோன்ற திட்டத்தால் பயனடையாத மூன்றாம் பாலினத்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM