திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து 6-வது மாதமாக உண்டியல் வருமானம் ரூ.100 கோடியை தாண்டியது. இந்த மாதத்தில் 22-ம் தேதியே ரூ.100 கோடியை கடந்ததால், இம்மாத உண்டியல் வருவாய் ரூ.140 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததும் திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் பக்தர்களின் வருகை படிப்படியாக அதிகரித் தது. தற்போது தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதனால் உண்டியல் வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் முதல் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை கடந்தது. அதேபோன்று பல நாட்கள் ரூ.5 கோடிக்கு மேல் உண்டியல் வரு வாய் வந்தது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 5 தடவை ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக இம்மாதத்தில் வெறும் 22 நாட்களிலேயே உண்டி யல் வருவாய் ரூ.100 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாத உண்டியல் வருவாய் ரூ.140 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயில் உண்டியலில் தங்கம், வெள்ளிப் பொருட்களும் காணிக் கையாக வருகின்றன. இதனால் கோயிலின் வருவாய் அதிகரித் துள்ளது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் வரையிலான 12 மாதங் களில் திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.