கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை குழுக்களுக்கான நிதியுதவி ரூ.60,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு மின் கட்டணத்தில் 60% சலுகை வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் துர்கா பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அந்த மாநில தலைநகர் கொல்கத்தா மற்றும் முக்கியநகரங்களில் பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா சிலைக்கு பூஜை, வழிபாடுகள் நடத்தப்படும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை நடத்துவதற்காக பல்வேறு துர்காபூஜை குழுக்கள் செயல்படு கின்றன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, துர்கா பூஜை குறித்து கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:
மின் கட்டணத்தில் 60% சலுகை
கடந்த ஆண்டு துர்கா பூஜைகுழுக்களுக்கு அரசு சார்பில் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஒவ்வொரு குழுவுக்கும் தலா ரூ.60,000 நிதியுதவி வழங்கப்படும். அதோடு மின் கட்டணத்தில் 60% சலுகையும் அளிக்கப்படும். செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை அரசு விடுமுறை விடப்படும்.
துர்கா பூஜை நிகழ்ச்சி யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செப்டம்பர் 1-ம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும். அதேநாளில் ஒவ்வொரு மாவட்ட தலைநகர்களிலும் பேரணி நடைபெறும்.
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை,சரஸ்வதி பூஜை நடைபெறவில்லை என்று சில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. துர்கா பூஜை மேற்கு வங்கத்தின் கலாச்சாரம், பெருமை ஆகும். உலகம் முழுவதும் திரும்பி பார்க்கும் வகையில் இந்த ஆண்டு துர்கா பூஜை விழா நடைபெறும். இவ்வாறு முதல்வர் மம்தா தெரிவித்தார்.
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு உட்பட பல்வேறு ஊழல் விவகாரங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிக்கியுள்ளனர். முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான பார்த்தா சட்டர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் விவகாரங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப துர்கா பூஜை விழாவை முதல்வர் மம்தா பயன்படுத்துகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.