தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக உள்ள தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பக் கோரிய வழக்குக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞரும், சமூக நீதி பேரவை தலைவரும் கே.பாலு தாக்கல் செய்த மனுவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் காலாவதியாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக தேசிய ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளதால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சட்ட அந்தஸ்து பெற்றுள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், தேசிய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால், மாநில அல்லது மண்டல அளவிலான ஆணையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வேண்டும் எனத் தெரிவித்து, மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.