தேனீக்களை பாதுகாக்க 50 கூண்டுகள்

பெங்களூரு: பெங்களூருவில் தேனீக்களை பாதுகாப்பதற்காக மரத்தில் செய்யப்பட்ட 50 கூண்டுகளை விஞ்ஞானிகள் பொருத்தியுள்ளனர்.

வேகமாக அழிந்துவரும் பூச்சி இனங்களின் பட்டியலில் தேனீயும் இருக்கிறது. அவற்றின் அழிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவற்றை பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறைவாக இருக்கின்றன.

குறிப்பாக பெங்களூருவில் அதிகரித்து வரும் கட்டிடங்களின் எண்ணிக்கையால் தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இத்தகைய‌ நகரங்களில் தேனீக்களை அழியாமல் பாதுகாப்பதற்காக விஞ்ஞானிகள் ‘தேனீ கூண்டு’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அசோகா சூழலியல் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் சேத்தனா காசிகர் கூறியதாவது: நகரங்களில் தேனீக்களை பாதுகாப்பது குறித்து எங்களது ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 மாதங்கள் பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டோம். அதன் அடிப்படையில் ‘தேனீ கூண்டு’ என்ற அமைப்பை உருவாக்கினோம். இந்த தேனீ கூண்டு, மூன்று பிரிவுகளைக் கொண்ட 2 அடி உயரமான அமைப்பாகும். மேல் பகுதி தேனீக்கள் நுழைவதற்கான துவாரங்களைக் கொண்டிருக்கும். நடுவில் வெறும் மூங்கில் குச்சி. அதன் கீழே மண்ணால் நிரப்பப்பட்ட பகுதி இருக்கும்.

இப்போதைக்கு பெங்களூருவில் 50 தேனீ கூண்டுகளை வைத்திருக்கிறோம். தோட்டம், பூங்கா, மொட்டை மாடி என பல்வேறு இடங்களில் வைத்துள்ளோம். இதனை தேனீக்கள் தேடிவர ஆரம்பித்துள்ளதால், எங்களது திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக நம்புகிறோம். பொதுமக்களுக்கும் தேனீ கூண்டுகளை வழங்குவோம். இதனை வாங்குவோர் அவற்றைவைத்த இடம், அதன் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.