இஸ்லாமாபாத்: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகயைில் பேசிய தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜாசிங்கிற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீது பாஜக எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கை என்பது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வலியையும், வேதனையையும் தணிப்பதாக இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் கோஷ்மஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜாசிங். இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். இதனால் அடிக்கடி ஏதாவது கருத்துகளை கூறி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தான் அவர் சமீபத்தில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை விமர்சித்து பேசினார். அப்போது இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் பற்றி சில கருத்துகளை குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக எம்எல்ஏ கைது
இதையடுத்து பாஜக எம்எல்ஏ ராஜாசிங்கிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஐதராபாத் நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜாசிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் ராஜாசிங்கிற்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாசிங்கை நேற்று கைது செய்தனர்.
ஜாமினில் விடுதலை
மேலும் பாஜக கட்சி சார்பிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது ராஜாசிங் எம்எல்ஏ கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு எதிராக போலீசில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ராஜாசிங் எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
பாகிஸ்தான் கடும் கண்டனம்
இந்நிலையில் தான் ராஜாசிங் எம்எல்ஏவின் செயலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛பாஜகவை சேர்ந்த எம்எல்ஏவின் கருத்து என்பது பாகிஸ்தான் மற்றும் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் உணர்வுகளை கடுமையாக காயப்படுத்தி உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2வது முறையாக பாஜக தலைவர்கள் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளனர்.
வேதனையை தணிப்பதாக இல்லை
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்எல்ஏவுக்கு எதிராக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை என்பது இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வலியையும் வேதனையையும் தணிப்பதாக இல்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இந்திய அரசு தடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
நுபுர் சர்மாவை தொடர்ந்து…
முன்னதாக பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த மே மாதம் இறுதியில் தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு பல இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ராஜாசிங் எம்எல்ஏ நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சையை கிளப்பி கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளார்.