ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம், பணியாளர்கள் பணம் பறிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. ஒட்டன்சத்திரம் மட்டுமின்றி, சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக இங்க வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஊழியர்கள் சிலர், சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் சாலை விபத்து உள்ளிட்டவைகளில் இறப்போரின் உடல்கள் இங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின் இறந்தவர்களின் உடலை வாங்கி செல்ல காத்திருக்கும் உறவினர்களிடம், மருத்துவமனை பணியாளர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் உறவினர்களிடம் கட்டாயப்படுத்தி ரூ. 2,500 முதல் ரூ.3,000 வரை வசூல் செய்வதாக கூறப்படுகிறது. பணம் தராதபட்சத்தில் உறவினர்களை பல மணிநேரம் காத்திருக்க வைத்து, உடல்களை தாமதப்படுத்தி தருகின்றனர்.
மேலும் விபத்துகளில் காயமடைந்து இங்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளின் பாக்கெட்டுகளில் உள்ள பணம் மற்றும் பொருட்களை அபகரித்து விடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.